Tuesday, October 27, 2009

திருக்குறள்: 128 (தீச்சொல் எனும் நஞ்சு...)

அதிகாரம்

: 13

அடக்கமுடைமை

திருக்குறள் : 128

தீச்சொல் எனும் நஞ்சு...

In English

ஒன்றானும் தீச்சொற் பொருட் பயன் உண்டாயின்,
நன்று ஆகாது ஆகிவிடும்.

பொழிப்புரை :
[சொல்லியவற்றுள்] ஒன்றேனும் தீச்சொற்பொருளின் பயனை உண்டாக்கிவிட்டால், [பகன்ற நல்லவை] அனைத்தும் நன்று அல்லது ஆகிவிடும்.

விரிவுரை :
சொல்லிய வார்த்தைகளுள் ஒன்றே ஒன்றாயினும் தீச்சொல்லின் பொருளாகப் பயனை உண்டாக்குமானால், அவர் எவ்வளவுதான் நல்லவை பகன்றிருப்பினும் அனைத்தும் நன்று அல்லதாய் ஆகிவிடும்.

ஆக ஒருவரின் பேச்சு தீச்சொல் ஒன்று கூட இல்லாததாக மட்டுமல்லாமல், சொல்லிய சொற்களுள் ஒன்று கூட மறைமுகமாகத் தீய பொருளையோ, பயனையோ தரத்தக்கதாக இல்லாமல் இருத்தல் அவசியம் என்பது கருத்து.

ஒரு துளி விடம் ஒரு குடத்துப் பாலையும் முறித்துவிடும் என்பதே போல், ஒரு தீய சொல் சொன்னவை அனைத்தையும் நலனற்றதாய் அதாவது தீயதாய் ஆக்கிவிடும்.

தீய சொல் என்பது முழுவதும் கெட்ட வார்த்தை என்பது மட்டுமல்லாமல், தீய பொருளைத் தரும், பயனைத் தரும் என்று அதில் பல பொருட்களைத் ’தீச் சொற் பொருளெனப்’ பொதிய வைத்துள்ளார் வள்ளுவர். அதாவது எதிர்மறையான, நேர்மையற்ற, இணக்கமற்ற, பலவீனப்படுத்தும், பயனற்ற, சுவையற்ற, அமங்கலமான, இனிமையற்ற, ஓசை நயமற்ற, நலனற்ற, பொருளற்ற, குணமற்ற, தெளிவற்ற, அழகற்ற, நளினமற்ற எந்த வார்த்தையும் தீய பொருளையோ, பயனையோ தருவதாகக் கொண்டு அவையும் தீதென்றே கொள்ளப்பட வேண்டுமாம். எனவே அத்தகைய தீயவை ஒரு வார்த்தையும் கலக்காதே பேச்சும், எழுத்தும் அமைதல் வேண்டும் அன்றில் அனைத்தும் தீயதாய்ப் போகிவிடும்.

எனவே சொல்லும் சொற்களில் ஒரு சொல்லும் திரிவுபடாதே, நயமாய், அமைதியாய், நா அடக்க ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்பதே இங்குள்ள மறை பொருள்.

குறிப்புரை :
தீய வார்த்தை ஒன்றே சொலினும் பகர்ந்தவை அனைத்தும் பாழாகிவிடும்.

அருஞ்சொற் பொருள் :


ஒப்புரை :

திருமந்திரம்: 1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

திருமந்திரம்: 1775
ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

திருமந்திரம்: 1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.

திருமந்திரம்: 1778
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.

திருமந்திரம்: 1783
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

திருமந்திரம்: 1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே.

திருமந்திரம்: 1799
அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே.

திருமந்திரம்: 1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

திருமந்திரம்: 1804
அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே.

திருமந்திரம்: 1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

திருமந்திரம்: 2109
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப்
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே.

திருமந்திரம்: 2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றது ஆரறி வாறே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல்:
தாண்டவக் கோனார் கூற்று:

மெய்வாய்க்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (27)

பற்றிரண் டும் அறப் பண்புற்றேன் நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலயாங் கட்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (28)

ஔவையார். ஆத்திச்சூடி:
83. பெரியாரைத் துணைக் கொள்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

***

In English:

Chapter : 13

Self-Control

Thirukkural : 128

Ill word, the poison...




In Tamil

onRAnum thIchchoR porut payan uNdAyin,
nanRu AkAthu Akividum.

Meaning :
Though only single word in the utterance is of ill, it makes the entire discourse bad.

Explanation :
Though only single word gives ill meaning in one's uttered good words, all the words whatever be the good they are will turn as bad only.

Therefore speech must be without even a single ill word and also none of the words of speech shall indirectly be mean or ill or offensive in meaning is the point here.

Like one drop of poison can spoil the entire pot of milk, one ill word can spoil the entire speech as useless.

Ill word is not only completely bad but also will yield wrong meaning and usage; that is why Valluvar has used in combining both 'Ill word and meaning' here. That is any words of negative, unethical, incompatible, weakening, useless, tasteless, inauspicious, unpropitious, unpleasing, sweet less, un-rhythmic, worthless, meaningless, quality less, unclear, beauty less and crude will lead to ill meaning, ill usage and therefore to be considered as offensive and ill. Therefore such ill word not being used even once should be the speech and writing; otherwise all will go waste as ill.

Therefore whatever words uttered must be of ethical, pleasant and peaceful, worthy and tongue controlled is the implicit meaning here.

Message :
Entire discourse turns bad though only single word is ill.

***

2 comments:

தேவன் said...

நல்ல விளக்கங்கள் ஐயா தொடருங்கள் சிறக்கட்டும் உங்கள் பணி !!

Uthamaputhra Purushotham said...

உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள் கேசவன்,

அமுத மழையினைத் தொடருவோம்... அறிவை நாளும் பெருக்குவோம்...

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...