Tuesday, July 28, 2009

திருக்குறள்: 54


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 54
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 54


பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்?


பொழிப்புரை (Meaning) :
மனைவியாகிய பெண்ணினும் பெருந் தகைமையானது யாது உள்ளது; கற்பு என்னும் திடமான உறுதிநிலை இருக்குமானால்.


விரிவுரை (Explanation) :
இல் வாழ்க்கையில் இல்லத்தாளிடம் கற்பு எனும் திடமான உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணை விடப் பெருமை உடையது ஏது?

இல்லத்தாள் கற்புடைய பெண்ணாக இருத்தல் அவசியம். இல்லை என்றால் அதைவிடச் சிறுமை அன்றில் கேடு இல் வாழ்க்கையில் வேறு ஏது?

வாழ்வியலின், கலாச்சாரத்தின், இல்லறத்தின் ஒழுக்கம் தாய்மையில் இருந்தே துவங்குகின்றது. எனவே பெண்ணிற்குக் கற்பு என்பது மிக அவசியமாகின்றது. கற்பு என்பது
சொற் திறம்பாமை என்று பின்னர் ஔவையாரால் சொல்லப்பட்டாலும், மனம் திறம்பாமை என்பதே உண்மையில் கற்பு என்பது. அதாவது காமத்தின்பால் உளம் கலங்கா உறுதிப்பாடு.

தாம் பெற்ற கணவனோடு மட்டுமே உளத்தாலும், உடலாலும் உடன்பட்டு இல்லற இன்பத்தில் பங்கு பெறுவதே கற்பு எனும் ஒழுக்கமாய், இல்லறத்தின் முக்கிய ஒழுங்காய் போற்றப் படுவது. நற்குடிப் பெண்களுக்குக் கற்பு என்பது அணிகலனாகப் போற்றப்படுவது இல்லத்தின் அனைவரின் வாழ்விற்கும் அது ஆணி வேறாக இருப்பதால்.

கண்ணதாசன் சொல்லும்,
’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் பாடலில்’; ’கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்’ என்பார். அது கற்புடைப் பெண்களுக்கான இலக்கணம்.

அனைத்துப் பெண்களிடமும் கற்பு என்பது திடமான உண்மை ஒழுங்காக இருக்கும்பட்சத்தில் ஆண்கள் இல்லறத்தை மீறித் தவறு செய்ய இயலாது என்பதும் விளங்கும். எனவே கற்பு என்பது பெண்ணின் அடிப்படை அவசிய ஒழுங்காயும், இல்லற வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகவும் உள்ள ஒழுங்காகும். குலத்தின் பெருமை, குடும்பத்தின் பெருமை என்பவற்றின் துவக்கம், அச்சாணி இல்லத்தரசியின் ஒழுக்கமே என்பது வாழ்வியலின், மனிதக் கலாச்சாரத்தின் மேன்மையான பண்பாடாகும்.

கற்பு என்பது கல்போன்றும் கண்ணிய மனத் திறம் என்பதன் சுருக்கம். இவை இருபாலருக்கும் பொது என்றினும், ஒரு வேளை தவறின் இயற்கைத் தண்டனை பெண்ணிற்கே அமைவதால் இது பெண்மைக்கு வலியுறுத்தப்பட்டது. அதாவது இங்கும் கண்ணதாசனின் “
கற்பாம் மானமாம்” எனும் பாடலில் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுதல் அவசியமாகின்றது. “வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத்தான் தண்டனை”. எனவே பெண் திருமணத்திற்கு முன்னர் காதல் வயப்பட்டாலும் கற்பு நிலை தவறாது அவனையே மணம் முடித்து இல்லறத்திற்குப் பின்னரேயே கலவி இன்பம் பெறலாம் என்பதே ஒழுங்கு.

ஒழுக்கமற்ற பெண்டிரைச் சோரம் போனவர் என்பார். ஒரு பெண் சோரம் போவதால் குல, குடும்ப, மற்றும் தானும் நாசம் அடைவார் என்பதற்கே கற்பிற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சோரம் என்பது சோகம். ஒரு துளி விடம் பாலை முறித்துப் பாழாக்கி விடும் என்பதே போல், கற்புக் களங்கம் கேட்டை உண்டாக்கிவிடும். கற்பு எனும் எழுதப்படாத விதியை மீறுவது சுலபம். ஆனால் அதை மீண்டும் பெற இயலாது என்பதை உணர்ந்தால் அதன் முக்கியத்துவம் விளங்கும்.

மேலை நாகரீகங்கள் பெண்ணிற்குச் சுதந்திரம் தருவதாயும், பழைமை, பண்டைக் கலாச்சாரங்களே கற்புப் பற்றிப் பேசும் என்பதெல்லாம், கற்பைத் தவற விட்டவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும். ஏன் என்றால் ஒவ்வொருவரும் தன் தாய் கற்புடையவராக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எவ்வாறு உறுதியுடன் உள்ளார்களோ அதே போன்று இல்லப் பெண்டிர் அனைவரும் ஒழுக்க முற்றோர் என்பதிலும், ஒழுக்கமுற்ற குலம், குடும்பம் என்று பெருமை கொள்ளுவதற்கும் பெண்ணின் பால் கற்பு அவசியம் என்பதை அறிவார்களாக.
பல ஆண்களுடன் வாழ்வதும், திருமண முறிவு செய்து பல மண வாழ்க்கையும் நிம்மதி தருவதாக மேலை நாட்டினரின் நாகரீகத்தில் சொல்லப்படும் வாழ்வு முறை, உண்மையில் போலித்தனமான, தவறவிட்ட வாழ்க்கைக்கான வடிகால்களே. சமூக அமைதிக்காகவும், உடைந்து போன உறவுகளின் வாழ்வு ஆதாரங்களுக்காகவும் அவர்களால் காணப்பட்ட தீர்வு வாழ்வை முறைமையே தவிர அவற்றில் மன அமைதி என்பது இழந்துவிட்ட ஒன்றுக்காக வருந்தாது வாழ முயலும் திறமே அன்றி உண்மையில் இயற்கை அமைதிக்கான வாழ்வு முறையல்ல அது.

மனிதர்கள் மிருகங்களிலிருந்து மேம்பட்டவர்கள். சமூக வாழ்வைச் சமைத்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வளர்த்தெடுத்தவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயர் நெறியை ஒழுகினால் உயர் சமுதாயமும், நற் சிந்தனையும், ஆக்கங்களும் உண்டாகும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க இயலாது. மிருகங்களில் ஜோடிகளாக வாழும் இயல்பு கொண்டவையும் உண்டு. மிருகங்களினும் மேன்மையுற்ற பறவைகள் ஜோடிகளாக, ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் வாழுகின்றன. ”அன்றில்” பறவை என்பது ஒன்று இல்லை என்றால் இன்னொன்றும் உயிரை மாய்த்துக் கொள்ளும் பறவை இனம். இவற்றின் ஒழுங்குகள் எல்லாம் எழுதப்படாத சட்டமாக மனிதனிற்குப் பாடம் சொல்பவை.

எனவே கற்பு என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசுபவர்கள் இயற்கையின் அடிப்படைத் தத்துவத்தை அறியாமல் பேசுகின்றார்கள் என்பதை அறிந்து உணரவேண்டும். கணவன் எனும் வார்த்தைக்கு கற்பிற்குக் காவலன் என்பது பொருள்.

எனவே ஒரு மேம்பட்ட கலாச்சாரம் என்பது பெண்கள் கற்போடு விளங்குவதும், அவர்க்கு கணவர்கள் காவலர்களாய் இனிதே இல்லறம் செய்தல் வேண்டும் என்பதும் திருவள்ளுவர் காலத்திற்கு மட்டுமல்ல என்றையக் காலத்திற்கும் பொருந்துவதே.

களவின்பம், கற்பின்பம் என்று அத்தியாயங்களில் வள்ளுவர் இன்பத்துப் பாலில் பேசுவதை அறியாதவர்கள், நமது கலாச்சாரத்தில் களவின்பம் உண்டுதானே என்று கற்புக் களங்கத்திற்குத் துணை தேடுவார்கள். உண்மையில் களவின்பம் என்பது கணவனிற்கும், மனைவிக்கும் இடையில் உள்ள புனிதமான, தனிப்பட்ட, மற்றவர்களின் முன் செயத்தகாத செயல்கள் என்று பொருள். எனவே களவின்பம் என்பது திருமணத்திற்கு முன்னர் கொள்ளும் உறவோ அன்றில் பிறன்மனை விளைவதோ அன்றில் பிறனில் மனம் கொள்வதோ அல்ல என்று தெளியவும்.

மேலும் கற்பு நிலை என்பது இரு பாலருக்கும் பொது. ஆணும் மனைவியை அன்றி வேறு பெண்ணைச் சேரல் என்பதும் ஒழுங்கீனமே. ஆயினும் இக்குறள் பேசுவது பெண் கற்பு பற்றியே என அறியவும். அதுவும் திருமணத்திற்குப் பின் பெண் கணவனையன்றி அரசனே ஆயினும் நோக்காப் பண்பாகும். கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் என்பது, அதை ஒழுகுவதால் தோன்றித் திடப்படுவது எனும் பொருளால் அஃது என்றுமே பேணி வளர்க்கப்படும் ஓர் ஒழுங்கு எனும் வள்ளுவரின் நயம் உணர்வோமாக.


குறிப்புரை (Message) :
இல் வாழ்வில் இல்லத்தாள் கற்போடு இருத்தல் பெண்மைக்கே பெருமை அன்றில் அஃது அனைவருக்கும் சிறுமை, கேடு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பெருந்தக்க - பெருமை உடைய, பெருந் தகைமையான


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 476
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே

திருமந்திரம்: 477
மாண்பது வாக வளர்கின்ற .(1).வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
.(1). வன்னியைக்

திருமந்திரம்: 487
இன்புற நாடி இருவருஞ் .(1).சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே

ஔவையார். ஆத்திச்சூடி:
இணக்கமறிந்து இணங்கு. 19
இயல்பலாதன செயேல்.24
அழகலாதன செயேல். 28
காப்பது விரதம். 33
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பிழைபடச் சொல்லேல். 78.
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
மெல்லினல்லாள் தோள் சேர். (மனையாட்டியைச் சேர்). 93
உத்தமனாயிரு. 102

ஔவையார். கொன்றைவேந்தன்: 14
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை

ஔவையார். நல்வழி :16
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

ஔவையார். நல்வழி :31
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...