Thursday, July 30, 2009

திருக்குறள்: 56

அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 56
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 56


தற்காத்து, தற்கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு, இலாள்-பெண்.


பொழிப்புரை (Meaning) :
தன்னைக் காத்து, தன்னைக் கொண்டவரைப் பேணி, தம்குலப் பெருமை சொல்லும் புகழ் சொற்களைக் காத்து, இல்லறக் கடமைகளில் சோர்வற்றுத் திகழ்பவளே பெண்.


விரிவுரை (Explanation) :
தன்னை உடல் வழியிலும், உள வழியிலும், தனது கற்பையும் காத்துக் கொண்டு, தன்னைக் கொண்டவனையும் பேணிக் காத்து, சமுதாயத்தில் தம் குலத்தின் பெருமை காத்து, இல்லறப் பணிகளில் சோர்விலாது கடமை ஆற்றுபவளே இல்லறத்துக்குரிய பெண்.

இதன் வாயிலாக குடும்பப் பெண்ணிற்கு உரிய அடிப்படைத் தகுதிகளையும், கடமைகளையும் பட்டியலிட்டு, இல்லறத்தில் பெண்மைக்கு உரிய முக்கியத்துவத்தை ஒருங்கே விளக்கியிருக்கிறார் வள்ளுவர்.

பெண் என்பவள் மற்றவரைச் சாராது தனித்து வாழக் கூடாது என்பதே நுட் பொருள். அது தற்கொண்டாற் பேணி என்பதன் மூலம் விளங்கும். தன்னைக் கொண்டவர் என்றினும் சரி அன்றில் தன்னைச் சார்ந்தோர் என்று கொண்டாலும் சரியே. மேலும் பெண் என்பவள் திருமணம் செய்து இல்லறம் செய்ய வேண்டும் என்பதும் நுட் பொருள். திருமணமற்றோ அன்றில் திருமணம் ஆகி மண முறிவு பெற்றோ அன்றில் கணவனை இழந்து விதவை ஆகினும் பெண் தனித்து வாழ்வதைக் காட்டிலும் மற்றோரைச் சார்ந்தே வாழுதல் கடமை ஆகும். இல்லறத்தில் வாழும் வாய்ப்புப் பெற்றோர் இயற்கையாகவே சிறப்புப் பெறுகின்றனர்.

இல்லம் சிறப்புடன் விளங்க வேண்டுமானால் கணவனும், மனைவியும் தத்தம் கடமைகளைச் செய்ய வேண்டும். இங்கே மனைவியின் கடமை தன்னைக் காத்துக் கொள்வதோடு கணவனையும் பேண வேண்டும் என்பது, கூடி வாழ வேண்டிய வாழ்வில் செய்ய வேண்டிய கடமை என்று கொள்ள வேண்டும். அவரவர் தத்தம் காப்பை மட்டுமே கொண்டால் இணக்கமற்ற எந்திரத் தனமான வாழ்வாகிவிடும். எனவேதான் கணவனை பேணுவதென்பது ஒரு கடமை என்றாகிவிட்டால் இல்லறத்தில் ஒருங்கே வாழும் தன்மை பெருகும் என்பது இல்லற நுணுக்கம். பேணுவது என்பது உணவளித்தல், உடல் நலம் காத்தல், மருந்து கொடுத்தல் என்பனவற்றுடன் அவன் மனதிற்குத் துணையாகவும் விளங்குவது.

கணவன் என்பவன் தானே குடும்பத்தைக் காக்க வேண்டியவன். அவன் சம்பாரிப்பது மட்டுமல்ல, குடும்ப நலத்தைப் பேண வேண்டாமா? என்பதெல்லாம் மீண்டும் பொறுப்புக்களைத் தவிர்த்துப் பெண் சோம்பிவிடவும், இல்லறத்தில் கணவனை எந்திரமாக்கி அதனால் இணக்கமற்ற தன்மை உண்டாக்கிவிடக் கூடாதே என்பது தான், பெண்ணிற்கான கடமைகளைச் சொல்ல வேண்டிய அவசியம் ஆனது. ஆனால் இதன் நோக்கம் கணவனை அல்லது இல்லத்தலைவனை அவன் கடமையிலிருந்து விடுத்து சோம்பர் படுத்தத்தானே என்று எண்ணவும் கூடாது. வாழ்வில் இணக்கம் என்பது தலைவனும், தலைவியும் ஒன்றிச் செயல் படுவது, சோம்புவதல்ல.

அன்பும், பண்பும் சேர்ந்து பெண்ணும், ஆணும் இல்லறக் கடமைகளை ஆற்றும்போது அங்கே இனிமை பெருகும். இணக்கம் மலரும். ஒருவரை ஒருவர் சார்ந்த இயற்கை வாழ்வு மலர்ந்து பரிமளிக்கும். நன் மக்கள் பிறப்பும், வளர்ப்பும் நிகழும். கணவன் இல்லறத்துக்குத் தேவையான பொருளீட்டத்தில் கவனத்தையும், குடும்ப நலனின் அக்கறையும், வெளி விவகாரங்களில் அக்கறையும் காட்ட, பெண் குடும்ப உள் விவகாரங்களிலும், மக்களின் வளர்ப்பிலும், குடும்பத்தினரின் உடல் நலத்திலும் அன்றாடப் பணிகளிலும் கவனத்துடன் கணவனுக்கும் ஏதுவாக இருக்க குடும்ப வாழ்வு செழிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவர்தம் பணியைக் குறைக்க உதவிக்கொள்ளுதல் என்பவை அடிப்படையில் அன்புடன் நிகழ்ந்தால் இல்லறம் மிகவும் இனிமையுடன் விளங்கும். அன்பு என்பதே அனைவரையும் இணைக்கும் அருமருந்து. நல்ல குடும்பம் உண்மையில் ஒரு பல்கலைக் கழகம்.


குறிப்புரை (Message) :
தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும், குடும்ப நற்பெயரையும் காப்பதுடன் சோர்வற்று இனிமையுடன் இல்லறத்தை நடத்தவேண்டியது இல்லாளின் கடமையாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
தகை - தகைமை, நன் மதிப்பு, மேன்மை, புகழ், கௌரவம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
.(1). கியங்கி யயந்திரு

திருமந்திரம்: 439
ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
.(1). சித்தின்

திருமந்திரம்: 440
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.

ஔவையார். ஆத்திச்சூடி:
சோம்பித் திரியேல். 53
தக்கோன் எனத்திரி. 54
தூக்கி வினைசெய். 59
தேசத்தோடு ஒத்து வாழ். 61.
நன்மை கடைப்பிடி. 65
நாடொப்பன செய். 66
நேர்பட ஒழுகு. 72
நோய்க்கு இடங் கொடேல். 75.
பீடுபெற நில். 79
பெரியாரைத் துணைக்கொள். 82
மனந்தடு மாறேல். 87
மாற்றானுக்கு இடம் கொடேல். (பகைவனுக்கு இடம் கொடேல்) 88
வைகறைத் துயில் எழு. 106

ஔவையார். கொன்றைவேந்தன்: 15
காவல்தானே பாவையற்கு அழகு

ஔவையார். மூதுரை :3
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனிமையவும் - இன்னாத
நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...