Friday, July 24, 2009

திருக்குறள்: 50

அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை திருக்குறள்

:

50


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.


பொழிப்புரை (Meaning) :
வையகத்தில் இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் ஒன்றாக வைக்கப்படுவார். தெய்வத்திற்கு இணையாக போற்றப் படுவார்.


விரிவுரை (Explanation) :
இவ்வுலகத்தில் இல்லறத்தை ஒழுகி மிகச் சிறப்போடு வாழ்கின்றவன், இந்த் உலகத்திலேயே, வானுலகத்துத் தெய்வத்திற்கு நிகராகப் போற்றப் படுவார்.

அதாவது துறவறம் மேற்கொண்டவர் பெறும் மேம்பாடுகளைக் காட்டிலும், இல்லறத்தை அதன் இயல்புகளோடு, சிறப்போடு ஒழுகி வாழ்பவர் வான் உறைத் தெய்வம் போல் போற்றும்படி மதிக்கப்படுவார் என்கின்றார்.

எனவே சிறப்பான இல்லற வாழ்வானது தெய்வ நிலையையும் தரும் வல்லமை கொண்டது என்பது பொருள்.


குறிப்புரை (Message) :
முறையான இல் வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர், அனைவராலும் தெய்வம் போல் போற்றப்படுவர்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வையம் - உலகம்
வாழ்வாங்கு - வாழும் முறைப்படி, வாழும் இயல்புகளோடு
உறையும் - வாழும், நிலைத்திருக்கும்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 257
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

திருமந்திரம்: 259
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே

திருமந்திரம்: 269
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

திருமந்திரம்: 285
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

ஔவையார். நல்வழி: 8
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.

ஔவையார். நல்வழி: 21
நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தாள்.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...