Friday, July 31, 2009

திருக்குறள்: 57


அதிகாரம்

: 6

வாழ்க்கைத் துணை நலம்

திருக்குறள்

: 57
Chapter : 6

Wife, Life's Partner

Thirukkural

: 57


சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.


பொழிப்புரை (Meaning) :
மகளிரைச் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவர் தம் நெஞ்சில் நிறைந்து நின்று காக்கும் காப்பே தலையானது.


விரிவுரை (Explanation) :
பெண்டிரைக் கணவர் சிறை வைத்துக் காக்கும் காப்பு என்ன பயனைத் தரும்? அவரின் நெஞ்சில் நிறைந்து நின்று அதனால் தற் காப்பில் அவர் தன் கற்பைக் காத்துக் கொள்ளுதலே தலையான காவல் ஆகும்.

கணவன் என்பவன் முன் சொன்னதே போல், கற்பெனும் கண்ணியக் காவலன் என்று இல்லாளுக்கு இருப்பினும் அதற்குப் பொருள் பிறரால் மனைவியருக்குத் துன்பம் வராது காப்பவர் என்று பொருள். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு இல்லாளை மனைக்குள் வைத்துச் சிறைப்படுத்திக் காவல் காத்து அவர் தம் கற்பைக் காவல் புரிவது என்பது ஒரு பயனையும் தராது. ஏனென்றால் பெண்ணின் கற்பிற்குக் காவல் உண்மையில் அவரது மனத் திடனே. எனவே அம் மனத் திடத்திற்குத் தக்க வகையில் கணவன் நல்லோனாய் அவர்தம் மனம் நிறையும்படி நடந்து கொண்டானேயானால் மடந்தை ஏன் வேறு எண்ணங்களுக்கோ அன்றில் வேறு யாரையோ நாடிச் செல்லப் போகின்றாள்? கணவனே தனக்கு எல்லாம் என்று நெஞ்சம் நிறைந்து அவர் கற்பென்னும் திண்மையுற்று விழங்குவார் என்பது நிச்சயம்.

பெண் பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து கற்பைக் காப்பாற்ற இயலாது என்பதே உண்மை. அவர்கள் தங்களைக் தாங்களே காத்துக் கொள்ளுமளவிற்கு மனத் திடன் கொள்ளுமாறு செய்தலே இல்லத் தலைவனின் கடமை ஆகும்.

இக்குறளின் மூலம் பெண்ணடிமை செய்தல் ஆகாது என்பதைத் திருவள்ளுவர் தெளிவு செய்கின்றார். உண்மையில் ஒருவருக்குத் தலையாயக் காப்பு என்பது அவர் தம் உள்ளமே, வெளியில் இருந்து பெறுபவையெல்லாம் அதற்கு அப்புறமே.

ஒரு பெண் கற்பு நெறி தவறிச் செல்ல மனத்தே தவறி எண்ணிவிட்டால் எந்தச் சிறையாலும் காவல் காக்கவும் இயலாது, தடுக்கவும் இயலாது. எனவேதான் மனத்திட்பம் கொள்ளுதல் பெண்ணிற்கு அவசியம்.

அதே போல் பெண்ணே தன்னைச் சிறையில் அடைத்துக் கொண்டு உலகத்துடன் ஒன்றி வாழாது இருப்பதும் பயன் தராது. அது பிறத்தியான் தனக்குக் கெடுதலை எளிதாகச் செய்து கொள்ளும்படி அமைய வாய்ப்புண்டு. எனவே தன் உள்ளத்தில் திடத்துடன் விளங்குவதே எந்தச் சூழ்நிலையிலும் தன் கற்பைத் தானே காத்துக் கொள்ளும் வலிமையைப் பெண்ணிற்குக் கொடுக்கும்.


குறிப்புரை (Message) :
மகளிர் தம்மைக் தாமே காத்துக் கொள்ள மனத் திடத்துடன் நிறைந்திருப்பதே கற்பிற்குச் சிறந்த காவல், சிறையில் அடைத்துக் கொள்ளும் காப்பு பயனற்றது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
நிறை - மிகுதி, பூரண, முழுவதும்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 436
அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரகின் றவைசெய்த காண்டகை யானே.

திருமந்திரம்: 437
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே

***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...