Saturday, July 11, 2009

திருக்குறள்: 37

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

37


’அறத்து ஆறு இது’ என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பொழிப்புரை (Meaning) :
அறத்தால் விளைவது இஃது என்று கூற வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமப்பவனிற்கும், அதில் ஏறிப் பயணிப்பவனிற்கும் உள்ள இடைவெளி வேறுபாடே அதைக் கூறி விடும்.


விரிவுரை (Explanation) :
அறத்தின் பயன் இது என்று பகருதல் வேண்டாம்; பல்லக்கைத் தூக்குபவனிற்கும், அதில் ஏறிச் செல்பவனிற்கும் உள்ள இடைவெளியே அதைச் சொல்லிவிடும் அதாவது உணர்த்தி விடும்.

நல் அறத்தைச் செய்தவன் பல்லக்கில் பயணிக்கின்றான்; அதைச் செய்யாதவன் பல்லக்குத் தூக்கியாக செயல் படுகின்றான் என்பது அக் காட்சியினால் அறியத் தரும் படிப்பினை. இதைச் சொல்லவும் வேண்டுமோ? என்பது குறளின் கருத்து.

அதாவது முன் வினையில் செய்த நல் அறத்தின் பயனாகவே இப் பிறப்பில் பல்லக்கில் பயணிக்கும் வாழ்க்கை அமைந்தது என்பதாகவும் அல்லது இன்றைக்கு ஒருவருக்குக் கிட்டி இருக்கும் சமூக அங்கீகார நிலையானது அவர் தம் இன்றைய நல் வினையின் பயன் எனக் கொண்டாலும், கருத்தானது அவரவரின் இன்றைய நிலைக்கு அவரவர் செய்த நல் அறங்களே, நல் வினைகளே காரணம் எனக் கொள்வது பொருத்தமாகும்.


குறிப்புரை (Message) :
நல் அறம் ஒழுகினால் நல்ல வாழ்க்கை அமையும்; சுகப்படுவார்கள்; மேன்மை அடைவர். ஒழுகாதோர் துக்கப்படுவார்கள், கீழ்நிலை அடைவர்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
சிவிகை - பல்லக்கு
பொறுத்தல் - சுமத்தல், காத்தல்
ஊர்தல் - பயணித்தல், நகருதல்


ஒப்புரை (References) :

ஔவையார் - நல்வழி: 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்.

ஔவையார் - மூதுரை: 7
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.

ஔவையார். மூதுரை: 22
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.

ஔவையார். நல்வழி: 30
தாந்தாமுன் செய்தவினை தாமே யனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.

பட்டினத்தார். பொது: 13
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

***

3 comments:

Anonymous said...

superb brother...

inventsekar here...orkut friend...

Anonymous said...

அறத்தால் விளைவது இஃது என்று கூற வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமப்பவனிற்கும், அதில் ஏறிப் பயணிப்பவனிற்கும் உள்ள இடைவெளி வேறுபாடே அதைக் கூறி விடும்.

***சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.***
this line i remember very much from my schoolhood... very superb explanation...
very superb thinking...valluvar valluvar thaan...

inventsekar

Uthamaputhra Purushotham said...

பள்ளியில் பயின்றதை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள வாய்ப்பானதை அறிந்து மகிழ்கின்றேன். பதிவிற்கு நன்றி நண்பர் inventsekar அவர்களே. நிறையப் பதியுங்கள்.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...