Sunday, July 26, 2009

திருக்குறள்: 52

அதிகாரம்

:

6 வாழ்க்கைத் துணை நலம் திருக்குறள்

:

52


மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும், இல்.


பொழிப்புரை (Meaning) :
இல் வாழ்க்கைக்குத் தக்க ஒழுக்கம் மனைவியிடம் இல்லை ஆனால், அவனது வாழ்க்கை எத்துணை மாட்ச்சிகள் உடைத்தாயினும் பயன் இல்லை.


விரிவுரை (Explanation) :
இல்லறத்திற்கு ஏற்ற நற்குணங்கள் மனையாளிடம் இல்லாவிடின் அவனது இல் வாழ்க்கையில் வேறு எத்தனை மாட்ச்சிகள் இருப்பினும் அவை சிறப்பு அற்றதே.

இல்லாளின் ஒழுக்கத்தின் அவசியம் இல்லாளுக்குச் சொல்லப்பட்டது நேர் பொருள். எனவே நற்பண்புள்ள மனைவி அமையுமாறு ஒருவன் நற்குடியில் பிறந்தவளை, குணங்கள் அறிந்து, எச்சரிக்கையுடன் தேர்வு செய்து மணம் புரிந்து, தன் வாழ்க்கை சிறக்க அவள் குணம் குன்றாதவாறு இல் வாழ்வைச் செய்ய வேண்டும் என்பதும் உட் பொருள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதும் இதற்கே.

விவாக ரத்து என்பது இக் காலத்தில் இதிலிருந்து தப்புவதற்கு இரு பாலருக்கும் இருப்பினும், ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கமற்ற மனைவியினால் ஏற்படும் இழுக்கும், அவமானமும், வலியும் சுலபத்தில் அழிந்துவிடுவதில்லையே.

இல்லத்தின் மாண்பு இல்லாதவளாகப் பெண் இருப்பாளேயானால், அவனுக்கு மாத்திரம் அல்ல அவளிற்கும் எத்தனைதான் வேறு மாட்சிகள் இருப்பினும் பயன் இல்லை. இல்லத்தின் மாண்பு அற்றவளாய் மணவிலக்குப் பெற்று பெண் தனித்துச் சென்றினும் பெறப் போவது எந்த மாட்சியும் இல்லை என்பதும் ஆழ்ந்து நோக்கில் விளங்கும்.


குறிப்புரை (Message) :
ஒழுக்கமற்ற மனையாள் உள்ளவனிற்கு இல்லற வாழ்வில் பெருமை என்பதே கிடையது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மனை மாட்சி - இல்லறப் பாங்கு, இல்லறப் பண்பு, இல் ஒழுக்கம்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 452
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே

திருமந்திரம்: 453
இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே

திருமந்திரம்: 456
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே

ஔவையார். ஆத்திச்சூடி:
நன்றி மறவேல்.21
இயல்பலாதன செயேல்.24
வஞ்சகம் பேசேல். 27
அழகலாதன செயேல். 28
அறனை மறவேள். 30
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
கேள்வி முயல். (நூற் பொருளைக் கேட்க முயல்) 39
கைவினை கரவேல். 40
கொள்ளை விரும்பேல். 41
சித்திரம் பேசேல். (பொய்மொழிகளைப் பேசேல்) 45.
சுளிக்கச் சொல்லேல். 47
சையெனத் திரியேல். 51
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
தெய்வம் இகழேல். 60.
தொன்மை மறவேல். 63.
நைவினை நணுகேல். 73
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பாம்பொடு பழகேல். 77
பிழைபடச் சொல்லேல். 78.

ஔவையார். கொன்றைவேந்தன்:
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். 42
பையச் சென்றால் வையந் தாங்கும். 67
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். 68

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...