Wednesday, July 15, 2009

திருக்குறள்: 41


அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

41


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொழிப்புரை (Meaning) :
இல்லற வாழ்க்கை வாழ்பவன் என்பவன் இயல்புடைய மூவர்க்கும் நல் வழியில் நிலையான துணையாவான்.

விரிவுரை (Explanation) :
இல்லறத்தில் வாழ்பவன் என்பான் இயல்புடைய மற்றைய மூவர்க்கும் நல் அறத்தின் கண் நிற்கின்ற துணையாவான். இயல்புடைய என்பதற்கு இயற்கையிலேயே தொடர்புடைய மற்றைய மூவர் என்பதாகும்.

இல்லற ஒழுக்க நெறியினின்று ஏனைய மூவர் என்றால் மற்றைய வாழ்வு நெறி முறை உடைய மூவர் எனப் பொருள்பட்டு இல்லறத்திற்கு முந்தைய நிலையான பிரம்மச்சரியத்திற்கும், பின்னர் நிலைகளான வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் எனும் நெறிகளை உடையவர்கள் என்பவர்களைக் குறிப்பதாகும். அதாவது இல்லறத்தானே தன் அறத்தால் மற்றைய நெறி ஒழுகுபவருக்கும் துணை ஆனவன் என்கின்றார். மற்றைய நெறிகளில் உள்ளோருக்கு அத்தகைய மற்றோருக்குத் துணையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகின்றது.

இல்லறத்திலேயே இயல்புடைய அதாவது இயற்கையில் தொடர்புடைய ஏனைய மூவர் என்றால் பெற்றோரும், துணைவியும், தாம் பெற்ற மக்கட் செல்வங்களும் ஆகும். இவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபட்டவனே துணை என்றாகின்றான்.

துணை என்பது ஆதரவும், பாதுகாப்பும் கொடுப்பவர் என்பதாம்.

எனவே இல்லறத்தானே ஏனைப் பிரிவோருக்கும், தன்னை நம்பி உள்ளோருக்கும் நல் வழியில் நின்று துணையாகின்றான் என்பதே சரியான பொருள்.


குறிப்புரை (Message) :
இல்லறத்தை மேற் கொண்டவரே மற்றையோர் அனைவருக்கும் நல்லறத்தின் கண் துணை ஆவார்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
இல் - வீடு
இல்லறம் - மனை அறம், குடும்ப வாழ்க்கை
நல் ஆற்று - நன் நெறி


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 294
துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

திருமந்திரம்: 299
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

ஔவையார். மூதுரை: 30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்.

***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...