அதிகாரம் | : | 4 | அறன் வலியுறுத்தல் | திருக்குறள் | : | 39 |
அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல.
பொழிப்புரை (Meaning) :
அறவழியால் வருவதே உண்மையான நிலையான இன்பம், மற்றைய தீய வழிகளில் வருபவை எல்லாம் இன்பம் அல்லாதவை; புகழும் இல்லாதவை.
விரிவுரை (Explanation) :
நல்லற வழியில் வருகின்றவையே நிலைத்த இன்பம். மற்றைய வழிகளில் வருபவை இன்பம் போலும் தோற்றமளிக்கக் கூடிய போலி இன்பங்கள் உண்மையில் துன்பங்களே. அத்தகைய போலி இன்பங்கள் நிலைத்தவையும் அல்ல. அறமற்ற வழியில் வருபவை புகழ்ச்சியும் அற்றவை, அவை பழிக்கே வழி வகுக்கும்.
தீய வழிகளில் வரும் இன்பங்கள், சிற்றின்பமாகவும், தற் காலிக சுகம் தருபவையாகவும் தோற்றமளிக்கும் துன்பங்களே. பிறன் மனை விளைதல், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈட்டும் பணம் இவையெல்லாம் உண்மையில் துன்பங்களே. கள வழியில் ஈட்டியவையும், திருடியவையும் புகழ் தரும் செயல்களும் அல்ல, அவை இன்பத்தைத் தருவது போல் காட்டும் உண்மையான இறுதித் துன்பங்களே. அவை நிம்மதியைக் கெடுத்து மேலும் மேலும் துன்பத்திற்கே வழி கோலும்.
அற வழி அல்லாது பேரின்பத்தையும், வீடு பேற்றையும் பெறவும் முடியாது. அறவழியில் வந்த செல்வமும், நுகர்ச்சியுமே துன்பம் தராது உண்மையான, நிம்மதியான இன்பத்தைக் கொடுக்கும்.
ஆதலின் அற வழி ஒன்றே நிலையான இன்பத்தையும் புகழையும் ஒருங்கே தரத் தக்க வழியாகும்.
குறிப்புரை (Message) :
அற வழி ஒன்றே உண்மை இன்பத்தையும் புகழையும் ஒருங்கே தரத் தக்கது.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
புறத்த - அல்லாதவை, போலித் தனமானவை, துன்பகரமானவை.
ஒப்புரை (References) :
ஔவையார். மூதுரை: 18
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னா
மண்ணின் குடமுடைந்தக் கால்.
ஔவையார். மூதுரை: 25
நஞ்சுடைமை தானறிந்து நாகக் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
ஔவையார். நல்வழி: 38
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
பட்டினத்தார். பொது: 20
நாப்பிளக்கப் பொய் உரைத்து நவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட்டீரே!
சிவவாக்கியர். அறிவு நிலை: 512
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் ஏழுநரகைக் காத்திருப்பது உண்மையே.
***
3 comments:
kuralamutham endra Tamilamutham padikka mikundha mana amaidhi....N.Alagappan
http://sites.google.com/site/vspmanickanar/
சுட்டிக்கு நன்றி நண்பர் நா. அழகப்பன் அவர்களே.
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...