அதிகாரம் | : | 6 | வாழ்க்கைத் துணை நலம் | திருக்குறள் | : | 53 |
இல்லது என், இல்லவள் மாண்பு ஆனால்? உள்ளது என்
இல்லவள் மாணாக்கடை?
பொழிப்புரை (Meaning) :
இல்லாதது யாது, இல்லத்தவள் நற்பண்புகள் உடையவள் ஆனால்? உள்ளதுதான் யாது இல்லத்தவள் நற்பண்புகள் இல்லாதவள் ஆனால்?
விரிவுரை (Explanation) :
இல்லத்தவள் மாட்சிமை உள்ளவள் ஆனால் வாழ்க்கையில் இல்லாததுதான் என்ன? அவள் மாண்பற்றவள் ஆனால் அவனது வாழ்வில் இருப்பதுதான் என்ன?
மனைவியிடம் மாட்சிமை இருந்தால் வாழ்க்கை நிறைந்து விழங்கும். அன்றேல் வாழ்வில் யாதுமே இல்லை.
எனவே இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் முக்கியமானது என்பது பொருள்.
இல்லத்தவளின் மாண்பு என்பது அவளது கற்பு மாத்திரம் அல்ல மேலும் இருக்க வேண்டிய அனைத்து நற் குணங்களையும் குறிக்கும்.
இல்லற வாழ்க்கை இன்பத்திற்கு, ஒன்றித் திகழுவதற்கு, அமைதிக்கு, அன்பைப் பரிமாறி இன்புற நல்ல பண்புகளும் ஒன்றிய மனமும் போதும். இருப்பதற்குள் நிம்மதி கொள்வதற்கும், சிறப்பதற்கும் நல்ல பண்புள்ள மனைவியே போதும்.
நற்பண்பற்ற மனைவியின் நடத்தை என்பது கற்புக் களங்கம் என்பது மட்டுமல்ல. கணவனை இம்சித்தும், துன்புறுத்தியும், ஒத்துழையாமை செய்வதும், இணக்கமற்று இருத்தலும், கொடுமைப் படுத்துவதும், பெண் தன்மை அற்று, மென்மை அற்று நடப்பதும், அடங்காப் பிடாரியாகத் திகழ்வதும், பெண்ணின் இயற்கைக் குணமான இரக்கம் அற்றுத் திகழ்வதும், பொறாமையும், வஞ்சகத்தன்மையும் கொண்டு இல்லத்தைப் பிரிப்பதும், எதிரிகள் என்று உருவாக்குவதும், கூட்டணிகள் அமைப்பதும், கணவனையும் அனைவரையும் அதிகாரம் செய்து திகழ்வதும், இல்லத்திற்குக் கெட்ட பெயர் வரும் செயல்களைச் செய்வதும், பிறந்த வீட்டின் பெருமை என்று சொல்லி புகுந்த வீட்டை இகழ்வதும், அவமானப் படுத்துவதும், பொய் சொல்லுவதும், ஓரம் பேசுதலும், பெருங்குரல் எடுத்துப் புலம்புதலும், மாற்றார் முன் அழுது பிறர் காணும் படி காட்சி அமைப்பதும், இல்லத்தில் தன் விருப்பப்படியே அனைவரும் நடக்க வேண்டும் என்பதும், தான் இட்டதே சட்டம் என்பதுவும், அழுதே காரியம் சாதித்தலும், குறைபாடுகளைப் பேச விடாதலும், பொய் உரைபேசி நம்பவைக்க முயலுதலும், அவ்வாறே பொய் வழக்குகள் ஜோடித்து நீதி மன்றம் செல்லுவதும், கெடுதல் செய்பவரோடு இணங்குதலும், கோபத்தைக் கட்டுப் படுத்தாது அனைவரிடமும் எரிந்து விழுதலும், அன்பற்று நடத்தலும், தான் பெற்ற பிள்ளைகளைத் துன்புறுத்தலும் எனும் அனைத்துக் கெட்ட குணச் செயல்களுமாகும்.
எனவே நற்பண்புகளற்ற, நற் குணமற்ற மனைவியினால் முதலில் வாழ்க்கையில் நிம்மதி போய் விடும். சுற்றம் அறும். கெட்ட பெயர் மிகும். செல்வம் எத்தனை இருப்பினும், பெயர் எத்தனை இருப்பினும் நாளாக நாளாக அனைத்தும் மறைந்து வாழ்வில் வேதனை மிகும். எனவேதான் இல்லத்தவள் சரி இல்லை என்றால் மற்றவை இருந்து பயன் என்ன என்று கேட்டார். எதுவுமே பயன் தராது என்பது அக்கேள்விக்குப் பதில்.
நற்பண்புள்ள மனைவியரில் உதாரணம் சொல்லப்படுவது கண்ணகி, சீதை, காரைக்கால் அம்மையார், திருநீலகண்டரின் மனைவியார், வள்ளுவனாரின் மனைவியாகிய வாசுகி அம்மையார் போன்றோர். அதாவது நற்பண்புள்ள மனைவியர் தெய்வம் போலும் போற்றப் படுகின்றனர் என்பதை அறியவும்.
கண்ணதாசன் சொல்லும்,
’உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ பாடலில்
உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி
பொன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்ததடி.
...
...
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேறென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.
...
பேருக்குப் பிள்ளை உண்டு, பெறும் பேச்சுக்குச் சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்.
என்று தெய்வத்தைப் போன்றவள் மனைவி என்பார். இது வாழ்ந்து சிறந்து, வயோதிகத்தில் மனைவியின் சிறப்பைப் பேசுவதாய் அமைந்த அற்புதமான பாடல்.
குறிப்புரை (Message) :
இல்லத்தவளின் மாண்பே வாழ்வில் மிக முக்கியமானது. இல்லாவிடில் எதுவுமே தேறாது.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
மாண்பு - மாட்சிமை, நற் பண்புகள், நற் குணங்கள், பெருமை.
மாணாக்கடை - மாண்பற்ற கடை நிலை
ஒப்புரை (References) :
திருமந்திரம்: 472
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே
திருமந்திரம்: 474
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே
திருமந்திரம்: 511
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.
ஔவையார். ஆத்திச்சூடி:
இயல்பலாதன செயேல்.24
வஞ்சகம் பேசேல். 27
அழகலாதன செயேல். 28
அறனை மறவேள். 30
கிழமைப்பட வாழ். (உடலும் பொருளும் பிறருக்கென வாழ்). 34
கீழ்மை அகற்று. 35
குணமது கைவிடேல். 36
கூடிப் பிரியேல். 37
கெடுப்பது ஒழி. 38
கேள்வி முயல். (நூற் பொருளைக் கேட்க முயல்) 39
கைவினை கரவேல். 40
கொள்ளை விரும்பேல். 41
சித்திரம் பேசேல். (பொய்மொழிகளைப் பேசேல்) 45.
சுளிக்கச் சொல்லேல். 47
சையெனத் திரியேல். 51
தீவினை அகற்று. 57
துன்பத்திற்கு இடங்கொடேல். 58.
நிலையிற் பிரியேல். 67
நைவினை நணுகேல். 73
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பாம்பொடு பழகேல். 77
பிழைபடச் சொல்லேல். 78.
நன்றி மறவேல்.21
காப்பது விரதம். 33
சான்றோர் இனத்திரு. 43
சீர்மை மறவேல். 46
செய்வன திருந்தச் செய். 49
சேரிடம் அறிந்து சேர். 50
மேன்மக்கள் சொல்கேள். 94.
மோகத்தை முனி. 97
வல்லமை பேசேல். 98
வாதுமுற் கூறேல். 99
வீடுபெற நில். 101
ஊருடன் கூடி வாழ். 103
வெட்டெனப் பேசேல். 104
வேண்டி வினை செயேல். 105
ஓரஞ் சொல்லேல். 108
ஔவையார். கொன்றைவேந்தன்:
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 12
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. 18
தீராக் கோபம் போராய் முடியும். 40
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.41
ஔவையார். நல்வழி: 23
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
***
1 comments:
விரிவுரை (Explanation),Vizhippuraiyaanadhu Nandri!(Enlightened)
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...