Friday, July 3, 2009

திருக்குறள்: 31

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

31


சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ, உயிர்க்கு?


பொழிப்புரை (Meaning) :
சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அறத்தை மீறிய ஆக்கம் எதுவோ, உயிர்கட்கு?

சிறப்பையும், செல்வத்தையும் பெற்றுத் தரும் அறத்தை விஞ்சிய ஆக்கம் மனித உயிர்களுக்கு வேறு ஏது? அதுவே.


விரிவுரை (Explanation) :
சிறப்பு என்பது மங்காப் புகழ் மட்டும் அல்ல, அது முக்தியை, வீடு பேற்றைக் குறிக்கும். அதாவது அறமானது இம்மையில் செல்வத்தையும், மறுமையில் வீடு பேற்றான முக்தியையும் பெற்றுத் தரும் செயல்பாடு. எனவே, மனித உயிர்கட்கு, அந்த அறத்தினை விஞ்சி இலாபம் தரும் செயல்பாடு வேறு யாது?

அறம் எனும் வழி முக்தியையும், செல்வத்தையும் பெற்றுத்தரும் எனும் அறிவு மாத்திரம் போதாது. அதைக் கடைப்பிடித்து ஒழுகினால் மாத்திரமே கிட்டும் என்பதே, ஆக்கம் என்று சொல்ல விளைந்ததின் உட்பொருள்.

மேலும், அற வழியைப் பேணுவதே உயிர்கட்கு ஆக்கம், அறமற்ற தீய வழிகள் நாசத்தை விளைவிக்கும் என்பதும் நுண்பொருள்.


குறிப்புரை (Message) :
அறமே மங்காப் புகழையும், முக்தியையும், செல்வத்தையும் ஒருங்கே தரவல்ல ஒழுங்கு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஈனும் - பெற்றுத் தரும்
ஊங்கு - விஞ்சிய, மீறிய, தாண்டிய
ஆக்கம் - செயல்பாடு, தொழில், ஒழுகுதல்.


ஒப்புரை (References) :

ஔவையார். நல்வழி: 21
நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமையாள் தான்.

ஔவையார். நல்வழி: 37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

பட்டினத்தார். பொது: 24
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே!

திருமந்திரம்: 2506
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...