Thursday, July 16, 2009

திருக்குறள்: 42

அதிகாரம்

:

5 இல் வாழ்க்கை திருக்குறள்

:

42


துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.


பொழிப்புரை (Meaning) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்த மூதாதையோருக்கும் இல்லற வாழ்வை ஒழுகுபவரே துணை ஆகும்.


விரிவுரை (Explanation) :
இல்லறம் மற்றும் பொருள் இன்பங்களைத் துறந்தவருக்கும், உண்பதற்கு வழியற்ற வறியவர்களுக்கும், இறந்த மூதாதையருக்கும் அதாவது முன்னோர் மற்றும் இறந்துபட்ட உறவினருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே துணை ஆவான்.

பற்றுக்களைத் துறந்த துறிவியருக்கும் வாழ்வாதாரத் தேவைகள் உண்டு. அதைப் போலவே திக்கற்ற வறியவருக்கும் இல் வாழ்க்கை நடத்துபவனே பரிவையும், ஆதாரத்தையும், ஆகாரத்தையும் நல்குபவன். மேலும் இறந்தாருக்கு நீர்க்கடன் செய்பவனும் அவனே.

துறவிகளுக்கும், வறியவருக்கும் கேடு ஏதும் விளைவிக்காது மாறாக அவர்களுக்குத் தேவையான பாதுகாப்புத் தந்து துணை தருவதும் இல் வாழ்க்கை ஒழுகுபவனே.

அதாவது துறவிகளும், வறியவர்களும் இல் வாழ்வானையே சார்ந்திருக்க இயலும் என்பதே இயற்கையான சார்பு நிலை என்பது தெளிவு.

மேலும் இவ்வாறாக ஏனையோரை ஆதரித்து தமது இல் அறத்தை ஒழுக வேண்டியது இல் வாழ்க்கை வாழ்பவனின் கடமை என்பது வள்ளுவர் கூறும் மறை பொருள்.


குறிப்புரை (Message) :
துறவிகளுக்கும், வறியவருக்கும், இறந்தாருக்கும் இல்லற வாழ்வினனே துணை ஆக இருக்க வேண்டியவன்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
துவ்வாதார் - இல்லாதவர், தரித்திரர்


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 297
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

திருமந்திரம்: 312
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...