Sunday, July 12, 2009

திருக்குறள்: 38

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

38


வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.


பொழிப்புரை (Meaning) :
வீணாக நாளைக் கழியாது நல்ல அறச் செயலை ஒருவன் ஆற்றி வந்தால், அஃது அவனுக்கு வாழ்நாள் வீணே போகாதவாறு வழியை அடைக்கும் கல். அதாவது நீண்ட வாழ்வைப் பெறுவார்.


விரிவுரை (Explanation) :
ஒரு நாளைக் கூட வீண் படாது நல் அறத்தைப் பேணிக் காரியத்தை ஆற்றிவரும் ஒருவனுக்கு, அவை அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்கள் போய் விடாதவாறு வழியை மறித்துக் காக்கும் கல்போல் விளங்கும். அதாவது நீண்ட வாழ்நாளைத் தரும் என்று கொள்ளவும்.

மேலும், வீணே ஒரு நாளைக் கூடக் கழித்துவிடாது நற் செயல்களை ஆற்றிவரும் ஒருவனுக்கு, அந்த அறச்செயல்கள் மறுபிறவியால் வரும் வாழ்நாளின் வழியைக் கல்போல் அடைத்தே அவனுக்கு வீடு பேறு எனும் முக்தியைக் கொடுக்கும் என்றும் கொள்ளலாம்.


குறிப்புரை (Message) :
ஒரு நாளைக் கூட வீணடிக்காது நல்லறக் காரியத்தை ஆற்றினால் நீண்ட வாழ்வு கிட்டும்; முக்தி கிட்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வீழ்நாள் - வீண் + நாள்
படாஅமை - படாது, விடாது, கழியாது


ஒப்புரை (References) :

ஔவையார். நல்வழி: 8
ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்- தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.

ஔவையார். நல்வழி: 10
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

பட்டினத்தார். பொது: 13
முதற்சங்கம் அமுதூட்டும்; மொய்க்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்; கடைச்சங்கம்
ஆம்போ தது ஊதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்.

பட்டினத்தார். பொது: 17
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே! பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்ரு தானிருக்கும் தான்!

திருமந்திரம்: 2628
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோ ர்க்குப் பணியொன்றும் இல்லையே.

திருமந்திரம்: 2854
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.


***


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...