அதிகாரம் | : | 5 | இல்வாழ்க்கை | திருக்குறள் | : | 48 |
ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொழிப்புரை (Meaning) :
ஒழுக்கத்தை ஒழுகி, அறம் வழுவாத இல்லற வாழ்க்கையானது, தவம் செய்வோரின் நோன்பை விட மேன்மை உடையது.
விரிவுரை (Explanation) :
நல் ஒழுக்கத்தின் பால் ஒழுகி நின்று, அறம் வழுவாது நடத்தப் படும் இல்லற வாழ்க்கை என்பது தவம் செய்வோரின் தவத்தினும்; தவ நோன்பினும் மேன்மை உடையது.
அதாவது ஒழுக்கம் தவறாத இல்லற நல்லறமானது தவத்தோரின் தவத்தைக் காட்டிலும் மேன்மை உடைய தவமாகும்.
இரைச்சல்களுக்கு நடுவே அமைதி காணும் இல்லறமே மிகச் சிறந்த தவமாகும். உலக இயல்பு வாழ்வு அலைகளுக்கு நடுவிலும் அமைதி, ஆக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, நல் ஒழுக்கம், கடமை என்று பண்படுத்தப் படும் இல்லறத்தானின் வாழ்க்கையே தவமாக, துறவியரின் தவங்களைக் காட்டிலும் சிறப்பானது.
குறிப்புரை (Message) :
அறம் தவறாத நல் இல்லற ஒழுக்கமே மேன்மை பொருந்திய தவம்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆறு - ஒழுக்கம்
இழுக்கா - வழுவா, தவறா
ஒப்புரை (References) :
திருமந்திரம்: 201
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
திருமந்திரம்: 202
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
திருமந்திரம்: 203
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
திருமந்திரம்: 265
வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.
திருமந்திரம்: 283
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.
ஔவையார். கொன்றைவேந்தன்: 78
மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு.
***
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...