Saturday, July 11, 2009

திருக்குறள்: 36

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

36


அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


பொழிப்புரை (Meaning) :
பிற்காலத்தே அறிந்து ஒழுகுவோம் எனாது இன்றே அறம் செய்து ஒழுகுதல் வேண்டும்; ஏனெனில் அந்த அறமே இறக்கும் காலத்தில் இறவாத் துணையாகும்.


விரிவுரை (Explanation) :
பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கடத்திவிடாது அறச் செயல்களை இப்போதே செய்தல் வேண்டும். அவை ஒருவர் இறந்த பின்னரும் இறாவாத் துணையாய் நிலைத்து நிற்கும். இறப்பு என்பது எப்போதும் நிகழலாம். எனவே நாளை, அல்லது அப்புறம் என்று நல் அறம் செய்தலை ஒத்தி வைத்தல் கூடாது. ஒருவருக்கு இறந்த பின்னரும் துணை வருவது அவர் ஆற்றிய நல் அறங்களே. எனவே அறச் செயல்களைச் செய்ய தாமதிக்காதீர் என்கிறார் வள்ளுவர்.

அறவினைகள், புண்ணியங்கள் ஒருவர் இறந்தாலும் அழிவதில்லை. அவை மறுமைக்கும் நன்மை பயக்கும் என்பது ஒரு புறமிருக்க, ஒருவர் இறந்த பின்னும் அழியாத துணையாய் வரத் தக்கது அவரது நல் அறங்களே என்பது தெளிவு.

மேலும் இவ்வையகத்தே ஒருவரின் அத்தகைய அற வினைச் செயல்கள், அவர் இறந்த பின்னரும் அழியாது நின்று நீண்ட புகழைத் தரும் எனவும் கொள்ளலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் அறம் செய்து கொள்ளலாம் என இளமைக் காலத்தில் நல் அறத்தை ஒழுகாது, கண்டபடி வாழ்ந்து பலர் வாழ்வைப் பாழ் செய்து கொள்ளுவர். அவர்களுக்கு இறப்பு என்பது எப்போது வரும் என்பது தெரியாதலால், நல் அறத்தை ஒழுகும் வாய்ப்பினை இழந்தவர்களாகி விடுவார்கள். எனவேதான் வள்ளுவர் நல் அறத்தைத் தள்ளி வையாது, இப்போதே மேற் கொள்ளும்படி கூறுகின்றார். அதற்கு முக்கியக் காரணம் இறந்த பின்னரும் அழியாது ஒருவருடன் கூட வரக்கூடியது அவர் தம் நல் அறம் மட்டுமே என்பதாலே.


குறிப்புரை (Message) :
இப்பொழுதே நல் அறத்தை ஒழுகுதல் நன்று; அவையே இறப்பிற்குப் பின்னும் மறையாது கூட வரும் துணையாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பொன்றுதல் - இறத்தல், உயிர் போகுதல்
பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த


ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை: 29
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம்.

ஔவையார். நல்வழி: 4
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லாள்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

பட்டினத்தார்: பொது: 18
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தோ வித்தகமாய்க்
காதிவிளை யாடி இரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!


***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...