Thursday, July 23, 2009

திருக்குறள்: 49

அதிகாரம்

:

5 இல்வாழ்க்கை திருக்குறள்

:

49


அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல்ஆயின் நன்று.


பொழிப்புரை (Meaning) :
சிறந்த அறன் எனப்பட்டதே இல்லற வாழ்க்கை; அதுவும் பிறர் பழித்தல் இல்லை என்றால் மிக நன்று.


விரிவுரை (Explanation) :
இரு வகை அறனுள்ளும், சிறந்த அறன் எனப்பட்டதே இல்லற வாழ்க்கை. அத்தகைய வாழ்விலும் பிறரைப் பழிப்பது இல்லை என்று ஆனால் அஃது மிகவும் நன்று.

அதாவது தாம் நல்லறமாகிய இல்லறத்தில் ஒழுகுகிறோம் என்பதற்காக, மற்றைய அறத்தோரை இழிவு செய்தலோ, பழித்தலோ நன்றன்று. பழித்தல் என்பது தகாத ஒழுங்காகும். எனவே அது இல்லாத இல்லற வாழ்வு மிகச் சிறந்ததாகும்.

மேலும் பிறர் பழிக்கும்படியான இல் வாழ்வைக் கொள்ளாதிருத்தலும் ஆகும். அதாவது பழிக்கு அஞ்சி நல்லற வாழ்வையே, ஒழுக்கமான வாழ்வையே இல்லறத்தில் மேற் கொள்ளுவதுமாகும். பிறர் பழிக்கும் படியான வாய்ப்பை இல்லற வாழ்வில் ஏற்படாதவாறு நடந்தால் இல் வாழ்விலும் அது மிகவும் நன்றானதாகும்.

எனவே இல்வாழ்வில் பழித்தல் என்பதே கூடாது. அதாவது யாரையும் பழித்தலும், பழிக்கப் படுதலும் கூடாது. பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதையே நாம் முதலில் கடைப் பிடித்தல் அவசியம். எனவே பிறரைப் பழியாது மாறாக அவரிடம் காணும் நல்லதைப் போற்றிப் பாராட்டும் பண்பை, இனியவை கூறலை நல்லறமாக ஒழுகுவோமாக.


குறிப்புரை (Message) :
நல் அறமான இல் வாழ்வில் யாரையும் பழித்தல் கூடாது; யாரும் பழிக்கும்படி நடக்கவும் கூடாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
பழித்தல் - பழி சொல்லுதல், இழிவு பேசுதல், ஓரம் பேசுதல், கிண்டல் செய்தல்.


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 330
மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

திருமந்திரம்: 331
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

திருமந்திரம்: 332
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

ஔவையார். நல்வழி: 25
மானக் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

***




2 comments:

Several tips said...

மிக்க நன்று

Uthamaputhra Purushotham said...

உங்களின் வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...