Friday, June 12, 2009

திருக்குறள்: 10


அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 10பிறவிப் பெருங் கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேராதார்.


பொழிப்புரை (Meaning) :
இறைவனின் பாதங்களைச் சேர்ந்து ஒழுகுவோர் மட்டுமே, இப் பிறவியால் விளைந்த வாழ்வெனும் பெருங்கடலை நீந்திக் கடப்பர், மற்றையோரால் கடக்க முடியாது.


விரிவுரை (Explanation) :

இப்பிறவி வாழ்க்கை என்பது பெருங்கடலைப் போன்றது. இறைவனைச் சார்ந்து அவன் பாதாரவிந்தங்களை ஒழுகுபவர்களால் மட்டுமே அக்கடலைக் கடக்க இயலும். இறைவனைச் சாராதோரால் அக்கடலைக் கடக்க இயலாது மூழ்கிவிடுவர்.

பிறவிக்கும் வாழ்வுக்கும் குறிக்கோள் இருக்கிறது. அதாவது உலக இன்ப, துன்பங்களை மட்டும் அனுபவித்துவிட்டு மறைவதல்ல வாழ்க்கை. அதன் நோக்கம் மீண்டும் பிறக்கும் சுழற்சியைக் கட்டறுத்து முக்தி பெற்று அதாவது வீடு பேறு பெறுவதாகும். அது ஒரு கடலைக் கடப்பதற்குச் சமம். அதற்குக் கடவுளின் பால் சேர்ந்து ஒழுகுவது மாத்திரமே கடப்பதற்கான கலத்தையும், உபாயத்தையும், தேவையான சக்தியையும் கொடுக்கும். அன்றில் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டு, இவ்வுலகத் துன்பத்தில் உழல வேண்டும் என்பது உட்கருத்து.

நம் வாழ்வின் முக்கிய நோக்கம், இந்த வாழ்வைக் காட்டிலும் மேன்மையான நிலையை அடைவதே ஆகும். பள்ளியில் கல்வி கற்கும்போது நோக்கம் அந்த வகுப்பினைப் படித்துத் தேறி, அடுத்த வகுப்பிற்கு, நிலைக்குச் செல்வதே. அதைப் போன்றதே வாழ்வும். மனது எனும் ஆத்மாவைக் கொண்டு ஆக்கபட்டுள்ள இந்த மனித வாழ்வின் முடிவு, பரமாத்மாவைச் சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு இறைவனையே சிந்தித்து ஒழுகி இந்த வாழ்வெனும் கடலை நீந்திக் கடக்க வேண்டும். மீண்டும் அதே வகுப்பில் வெற்றி பெறாத, தேறாத மாணவராக அல்லாது, இதே வாழ்க்கையை மீண்டும் பிறந்து உழலாமல் மனிதன் இந்த வாழ்வில் தேர்ச்சி பெற்று, முக்தி பெற்று வீடு பெற வேண்டும்.

எனவே பிறப்பறுக்கும் மருந்தாகிய இறைவனைப் பற்றி ஒழுகி மேம்படுவோமாக.


குறிப்புரை (Message) :

இறைவன் அடியைப் பற்றிக்கொண்டு ஒழுகினால் இப்பிறவி வாழ்க்கையைக் கடைந்தேறலாம். அன்றில் இயலாது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பிறவி: பிறந்து அனுபவிக்கும் வாழ்வு


ஒப்புரை (References) :


மாணிக்கவாசகர், திருவாசகம்:
...
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
...
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி
...
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனர்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...