skip to main |
skip to sidebar
திருக்குறள்: 28
அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பொழிப்புரை (Meaning) :
பயன் நிறை மொழி தந்த மாந்தரின் பெருமையை, நிலத்தின் கண் அவர் ஆற்றிய மறை மொழிகளே காட்டி விடும்.
விரிவுரை (Explanation) :
பொருள் நிறைந்த மொழி கொண்ட துறவியரின் பெருமை, நில உலகத்தில் அவர் இயற்றிய அல்லது ஆற்றிய அல்லது ஆணையிட்ட மந்திரங்களே காட்டி விடும்.
சான்றோர்களின் பெருமையை இவ் உலகத்தில் அவர் ஆற்றிய மறை மொழிகளே பறை சாற்றி விடும். உதாரணத்திற்கு திருக்குறள், திருமந்திரம், திருமுறை, திவ்வியப் பிரபந்தம் இவற்றைச் சொல்லலாம்.
மேலும் குறை மொழி அதாவது பயனிலாச் சொல் ஆற்றுவோர் சான்றோர் அல்லர் என்பதும் குறளின் மறைபொருள்.
குறிப்புரை (Message) :
துறவியரின் மொழிகள் பொய்ப்பதில்லை.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
நிறைமொழி - பயன் நிறைந்த சொல்
ஒப்புரை (References) :
தொல்காப்பியம் :1484
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
திருமந்திரம்: 52
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
திருமந்திரம்: 54
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
திருமந்திரம்: 55
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
திருமந்திரம்: 85
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...