Friday, June 12, 2009

திருக்குறள்: 3
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வர்.


பொழிப்புரை (Meaning):
மனமெனும் மலரின்கண் நிறைந்தவனின் சிறந்த திருவடிகளைப் பின்பற்றுபவர், நிலமெனும் இவ்வுலகத்தின் கண் நீண்ட காலத்திற்கு வாழ்வார்.


விரிவுரை (Explanation):

நினைத்தவுடன் மனத்தே விளைகின்ற, மேவுகின்ற இறைவனது பாதங்களைத் தொடருவதால், மன அழுத்தங்கள் நீங்கப்பெற்று மனிதர்கள் இப் பூவுலகில் இசைந்தொழுகி நீண்ட காலத்திற்கு வாழ்வார் என்பது பொருள்.

எப்போதுமே நல்லதை நினைத்தல் வேண்டும் என்பது பொதியவைத்த பொருள். அதாவது எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்; பூவிலும் இருக்கிறார், புல்லிலும் இருக்கிறார். ஆனால் பூவென்பது அழகானது, சிறப்பானது, மென்மையானது, மணத்தையும், மகிழ்வையும் தருவது. அதுவும் இங்கே சொல்லும் மலர் எத்தகைய பூ, மனமெனும் மலரில், இதயத்தாமரையில். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகவே ஆவோம் என்று பின்னர் சொல்லும் வள்ளுவர், எனவே அப்படி எண்ணுவதைக் கூட அழகாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே மலர்மிசை ஏகினான் என்றார். அதிலும் பாதங்கள் கூட மாண்பு மிக்கவை.

உளத் தாமரையில் இறைவன் முன்னமேயே இருக்கிறான் என்பதும் பொதிய வைத்த மறை பொருள். இறைவன் மலர்மிசை ஏகினான், ஏறி அமர்ந்தான் அல்லது நிறைந்தான் என்று இறந்த காலத்தில் சொல்லப்பட்டது அந்தக் காரணத்திற்காகவே.

ஆக இறைவனைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. உங்களின் உளத் தாமரையிலேயே அமர்ந்திருக்கிறார் என்பதுவும், எனவே ஒரு மலரை இன்னும் மலர்கள் கொண்டு அர்ச்சிக்கத் தேவையே இல்லை என்பதும் கூட விளங்குகின்றது. ஆயின் அவரின் மாண்புமிகு பாதங்களைத் தொழுதால் மட்டுமே இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்பதும் இக்குறளின் முடிவு.


குறிப்புரை (Message):

மனதோடு நிறைந்த இறைவன்பால் சரணடையும் இறை வழிபாடானது உலகில் நீண்ட இன்ப வாழ்வைக் கொடுக்கும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms):

மிசை - கண்
ஏகுதல் - நடத்தல், நிறைத்தல், மேவுதல், விரவுதல், தழுவுதல்
மாண் - மாண்புமிகு, மாட்சிமைதங்கிய


ஒப்புரை (References):

இதைத்தான் சித்தர் இலக்கியத்தில், சித்தர்கள் இறைவனைத் தேடிக் கோயில் குளம் என்றெல்லாம் அலைய வேண்டாம் உன் உளத்திலேயே இருகிறார் என்று சொல்லுகிறார்கள். மேலும் சிலை வழிபாடுகளையும் தவிர்த்து உளத்தில் ஒளியைக் காணலாம் என்பதும் அவர்களின் தெளிவு. சமைக்கப்பயன் படுத்திய பாத்திரம் கறியின் சுவையை அறியவில்லையே, தெய்வம் உனக்குள் இருந்தும் நீ அறியவில்லையே என்பது பொருள்.

சிவவாக்கிய சித்தர்: பாடல்: 496
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா!
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


திருமந்திரம்: 27
சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.


தெய்வங்களை மலர் மீது வைத்துத் தொழுதல் சமயங்களில் கீழ்க்கண்டவாறு காணப்படுகிறது.
* சைவத்தில் மலர்மிசை ஏகினான் என்பது சிவபெருமானை. பூவிருந்த வல்லி: சக்தி.
* வைணவத்தில் அது விஷ்ணுவைக் குறிக்கும். மலர்மிசை ஏகினாள்: அலர்மேல் மங்கை. இலக்குமி.
* வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்: சரஸ்வதி
* கௌமாரத்தில் மலர்களில் பிறந்தவன் முருகோன்

சேக்கிழார், பெரிய புராணம்: 1
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

கம்பரின் சரசுவதி அந்தாதி: 12
தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டு ஞானம் புரிகின்றதே.


கம்பரின் சரசுவதி அந்தாதி: 19
கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே.


அருணகிரிநாதரின் கந்தர் அநுபூதி: 51
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...