Friday, June 19, 2009

திருக்குறள்: 17


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 17



நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்.


பொழிப்புரை (Meaning) :
பெரிய கடலும் தன் நீர் வளமை குன்றும், மேகம் தான் தடித்து, பெருத்து எழுந்து விளங்காது இருந்து விடின்.


விரிவுரை (Explanation) :

மேகம் திரண்டு விளங்கி, மழை வழங்கா நிலை ஏற்படின், பெருங்கடலும் தனது நீர் வளமை குன்றி விடும். கடல் தன் நீர் தன்மை சுருங்கின் அதால் அதற்குள் இருக்கும் உயிர்களின் நிலை அனைத்தும் இழந்து, முத்து, மணி விளையாது, வளம் குறைந்து மொத்தத்தில் அதன் இயல்பு நிலை குன்றி விடும் என்பது பொருள்.

முகில்கள் கடல்களிலிருந்தே நீரைக் கொண்டு எழுந்து உருவாகி மீண்டும் பொழிகின்றன. எனவே இது ஒரு சுழற்சி. இதில் மேகங்கள் திரட்ச்சி பெற்று வழங்காது போயின் கடல் குன்றும், கடல் குன்றின் மேகமும் திரளாதே என்பது இயற்கையில் ஏற்படும் ஐயப்பாடு மற்றும் வள்ளுவரின் ஆதங்கம்.

பொதுவாக இயற்கை தனக்குத்தானே நடு நிலை கொள்கிறது என்பது ஆதரவான விடயம். வெயில் அதிகமாகி வெற்றிடம் ஏற்பட்டால், அங்கே காற்றுப் புகுந்து சூறாவழி ஆகிவிடும், அதைப் போலவே அங்கே குளிர்ச்சி ஏற்பட்டு மேகங்கள் திரண்டு விடும். மேகங்கள் திரண்டு பூமியில் வற்றிய நீர்மையைச் சரி செய்யப் பொழியும். இவை இயற்கையின் நியதி.

இவற்றில் இன்று அதி வெப்பத் தாக்குதலால், துருவப் பிரதேச பனிக்கட்டிகளின் தொடர் உருக்கம், கடல் மட்டத்தை உயர்த்திக் கொண்டு உலகத்தை மிரள வைப்பது அனைவரும் அறிந்ததே. இவற்றின் காரணங்களான ஓசோன் படல ஓட்டை, அதற்குக் காரணமான காடுகளையும் மரங்களையும் அழித்த மனிதனின் செயல்பாடு, அளவுக்கு மீறிய செயற்கைக் குளிரூட்டிகள், குளிர் பதனப் பெட்டிகள், அடர்த்தி மிகுந்த செயற்கை வாசனைத் திரவியங்கள் என்று அனைத்தும் மனிதனின் இயற்கையோடு போட்டி போடுகையில் நிகழும் பக்க வாதங்கள். எனவே இவற்றை உடனடியாகச் சரி செய்வ வேண்டியது மனிதனின் அத்தியாவசியக் கடமை.


குறிப்புரை (Message) :

மேகம் பிடிப்படையாது இருந்தால் பெருங்கடலும் வளங் குன்றும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

வான் மேகத்தின் வெவ்வேறு நிலைகள்:
முகில்: முகப்பது
எழிலி: முகந்தபின் மேலெழுவது


ஒப்புரை (References) :


பரிபாடல்: 20
கடல்குறை படுத்தநீர் கல்குறைபட வெறிந்து


சிந்தாமணி: 32
இலங்க லாழியி லான்களிற் றீட்டம் போற்
கலங்கு தெண்டிரை மேந்து கனமழை.

திருமந்திரம்: 30
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.


ஆண்டாள், திருப்பாவை:
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...