Saturday, June 13, 2009

ஓம் என்பதை அறிவோம்

நாம் தெய்வந் தொழுவதையும், அகரத்தையும் குறளில் பேசும் சமயம், அது தொடர்பான அருமையான மிகவும் பொருத்தமான கேள்வி நண்பர் அஜீத்குமார் அவர்கள் வினவிய ஓம் எனும் தத்துவம் பற்றியதும் ஆகும்.

ஓம் என்பது அகரம், உகரம், மகரத்தையும் குறிக்கும். ஆஉம் என்பது ஆம்/ஓம் என்பதன் இடைநிலையைக் காட்ட முயல்வது.

ஓம் என்பது பிரணவம் என்கிறார்கள். அரன்(சிவன்), அயன், மால் மூவரையும் குறிக்குமாம்.
ஓம் எனும் ஒலி தமிழிலிருந்தே உண்டானது.
ஓம் எனும் சொல்லிற்குத் தமிழில் மட்டுமே அர்த்தம் உள்ளது.
ஓம் என்றால் ஆம் என்று பொருள்.
ஓம் என்பது Positive ஒலி. ஆம் என்பது Yes.

எனவே ஓம் என்பதை திரும்பத் திரும்ப ஒலிக்க அதுவே மந்திரம்.
மந்திரத்தை உச்சரிக்க அதுவாகவே நாம் ஆகிவிடுவோம் என்பது ஐதீகம்.

உமா என்பது ஓமின் திரிபாகி வந்திருக்கலாம் என்பது உங்களின் பதிவால் அறிகிறேன். இருக்க வாய்ப்புண்டு என்றே நம்புகின்றேன். அம்மாவில் ஓமைக் கலந்து உம்மா, உமாவும் ஆகி இருக்க வாய்ப்பு உண்டு.

நமது சகோதரர்களான ஈழத்தமிழர்கள் ஆம் என்பதை ஓம் என்றுதான் உச்சரிக்கிறார்கள். பெங்களூர் தமிழர்கள் ஆமாவா என்கிறார்கள்.

கிருஸ்துவ ஆமெனும், ஓமெனும் இஸ்லாமில ஆமெனும், ஏமெனும் எல்லாம் தமிழின் ஓம்தான். நமது உள்ளானே, இல்லானே என்பதுதான் அல்லான் என்பதாகி அல்லா ஆகியது. மலையாளிகள் அல்லவே என்பதை அல்லே என்கிறார்கள். கன்னடர்கள் அல்ல என்பதை அல்லா என்கிறார்கள்.

ஓம் எனும் ஒலியாலான மந்திரத்திற்காகவே ஓதுதல் என்பதும், ஓதுவார் என்பதும் உண்டாகின.

ஓங்காரனாகிய சிவனே அதை அறியாதவர் போல், தன் செல்வனிடம் உபதேசம் கேட்டுக் கொள்வது ஒரு விளையாட்டு. இது கிருபானந்த வாரியார் உரையில் கேட்டது. பிள்ளையிடம் தோற்பது போல் ஆட்டமாடி தன் மகனை வெற்றி பெறச் செய்து அதன் மூலம் அவனிற்கு வெற்றி நம்பிக்கையை உணர்த்துவது. இதைக் காட்டவே சுவாமி மலை ஸ்தல புராணம். கண்ணதாசனின் ‘என்னைப் பார்த்து எனை வெல்லவும்...’ என்பது இதுதான். பாடல் ஆரம்பம் ‘நல்லதொரு குடும்பம்... பல்கலைக் கழகம்’. பிள்ளைகளிடம் தந்தைகள் தோற்பது போல் நடிப்பது நல்ல மகிழ்ச்சியான தருணங்கள் அல்லவா... அப்போ யார் முகத்தில் சந்தோசம் அதிகம்? (நிச்சயமாக தாத்தா முகத்தில்தான் ரொம்ப ரொம்ப).

ஓம் எனும் ஒலி, பிராண வாயுவின் அசைவே, அது சித்தத்தின் அசைவே என்பது சித்தர் இலக்கியம். அதுவே பிராணயாமம் செய்வதின் சூட்சுமம்.

திருமந்திரத்தில் பிரணவ ஒடுக்கம் பற்றிய தத்துவங்கள் பல உண்டு. திருமந்திரத் தத்துவங்களை அவற்றின் வரிசைக்கிரமத்தோடு விளக்க வேண்டின் மிகவும் விரியும். எனவே இங்கே சுருக்கமாக சிலவற்றை மட்டுமே தருகின்றேன். ஓங்காரத்தில் ஒப்பில் ஒருமொழி தோன்றும் (பெரும் பொருட் கிளவி). இதனை மகாவாக்கியம் எனவும் கூறுவர். இதனின்று பஞ்சபூதங்கள், ஆருயிர் வேறு பாடுகள் உள்ள ஒரு, இரு மற்றும் மும் மலமுடையார் ஆகிய அனைத்து உயிர்த் தொகுதிகள் தோன்றின எனவும், அகர, உகர, மகரமே பிரணவமாகின்றன எனவும் குறிப்பிடுகின்றார்.

திருமந்திரம்: 1753
அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யியிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே.


திருமந்திரம்: 2626
தூலப் பிரணவஞ் சொரூ பானந்தப் பேர்
பாவித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண்
ஆலித் தமுத்திரை யாங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.


திருமந்திரம்: 2628
ஓங்காரத்துள் ளேயுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே யுதித்த சராசரம்
ஓங்காரத் தீதத் உயிர் முற்றும் உற்றன
ஓங்கா, சீவபரசிவ ரூபமே.


(குறிப்பு: திருமந்திர எண்கள் ஒவ்வொரு பதிப்புக்களிலும் வேறுபடுகின்றன)


தமிழ் எழுத்து வடிவமைப்பு:
தமிழ் எழுத்தின் வடிவமைப்பிற்கும் காரணங்கள் உண்டு. ’அ’ என்பது வாயின் அகண்ட நிலையையும், ’ஆ’ என்பது மேலும் அகண்ட நிலையையும், ’ஒ’ மற்றும் ‘ஓ’ என்பவை உச்சரிக்கும் போது உதடுகளின் அமைப்பையும், ‘சி’ சிவனின் தலையில் இருந்து கங்கை நீர் வழிவதைக் குறித்தும், ‘ந’ மற்றும் ‘த’ சிவனின் ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் நடனத்தையும், தாண்டவத்தையும் குறிப்பன.
அதைப் போலவே ’ஸ்ரீ’ என்பது பள்ளி கொண்டுள்ள மாதவன், இலக்குமி, ஆதிசேட்னைக் காட்டுவன. இப்போது உற்றுப் பாருங்கள், தலைக்கு ஒரு கோடும், பாதங்களுக்கு இரு கோடுகளும் நெடுவாகவும், படுக்கைக் இணைக்கும் படுக்கைக் கோடும் பள்ளிகொண்ட மாதவனையும், தொடர்பான கீழ்ச் சுழி ஆதி சேடனையும், மேல் சுழி இலக்குமியையும் குறிக்கும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆன்மாவைப் பசு என்றும், பரம்பொருளைப் பதி என்றும் சொல்வார்கள். அத்தோடு ஒவ்வொரு மனிதரும் சிவனே, அதாவது சக்தி/சீவன்/ஆன்மா உள்ளவரை சிவம், அவை நீங்கின் சவம். சிவன் எனப்படுவது சிவம், சிவப்பு, செம்மை, சிகரம் போன்ற பொருள்களின் தொடர்பாய் விளைந்தது. ’அன்பே சிவம்’ என்பது பற்றிப் பிறகு பேசுவோம்.

தமிழின் உயிர் எழுத்துக்களில் உள்ள உட்சுழி அதாவது அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் எழுத்துக்களில் உள்ள சுழிகள், உள் நாபியிலிருந்து கிளர்ந்தெழும் ஒலியைக் குறிக்க உண்டானது. ஈ எப்படி இதில் தப்பித்தது என்பது ஆராயப் படவேண்டும். பிற்காலங்களில் இந்த எழுத்தின் அமைப்பு மாறி இருக்கலாம். அல்லது ஈ எழுத்தின் நடுவிலும், அருகாமையிலும் அமைக்கப்படும் புள்ளிகள் மெய்யெழுத்தின் மீது இடும் புள்ளிகள் போல் அல்லாது சிறிய வட்டங்களாக, சுழிகளாக இருந்திருக்க வேண்டும். அதாவது ஆயுத எழுத்தில் உள்ளவை போன்று. இப்போது நம் வசதிக்காக அவற்றைப் புள்ளிகளாக மாற்றி விட்டார்கள்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...