Friday, June 12, 2009

திருக்குறள்: 7
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 7தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது.


பொழிப்புரை (Meaning) :
தனக்கு யாரும் ஒப்பில்லாத இறைவனின் பாதங்களைச் சேர்ந்து ஒழுகுபவருக்கு அல்லாமல், மற்றவர்களுக்கு அவர்தம் மனக்கவலையை மாற்றுதல் கடினம்.


விரிவுரை (Explanation) :

தனக்கு இணையே இலாத, பேராற்றல் மிக்க இறைவனின் பாதார விந்தங்களைச் சேர்ந்து ஒழுகுபவருக்கு அல்லாது மற்றவர்களின் மனக் கவலை, துன்பம் போன்றவற்றைக் குணப்படுத்தும் சாத்தியம் அரிது என்கிறார் வள்ளுவர்.

அதாவது இறைவனைச் சார்ந்து ஒழுகாதாருக்கு அவை இயலாது என்பது பொருள். முக்கியமாக மனக் கவலை என்று சொன்னார். மற்றைய துன்பங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரணமான துன்பம் மனக் கவலை என்பது நுணுக்கம்.

தங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்திய, ஈடற்ற, சர்வ வல்லமை பொருந்திய இறைவனின் மேல் நம்பிக்கை வைத்து ஒழுகினால், மனத் துயர் வந்தபோதும் கூட அவை தானாகவே மாறிவிடும் அல்லது குணமாகிவிடும் என்பது உட்பொருள்.

தெய்வ நம்பிக்கை மனத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் உபாதை தோன்றினும் குணமாகிவிடும் என்பதும் மறை பொருள்.

ஒப்பு உயர்வற்ற இறைவனின் மேல் நம்பிக்கை வைத்துத் தொழுதாலே மன நலம் பெறுவீர் என்பது திண்ணம்.


குறிப்புரை (Message) :

ஒப்பிலியாகிய இறைவனைப் பணிந்து ஒழுகாதவர்களுக்கு ஏற்படும் துன்பமும், மனக் கவலையையும் நீங்காது. இறை வழிபாடே மனக் கவலைக்கு மாமருந்து.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

தாள் : பாதம்
அரிது: சின்மை, இன்மை, கடினம், இயலாது.


ஒப்புரை (References) :

தனக்குள் கிடந்து உழலும் மனக் கவலையானது வேறொரு பொருளின் அல்லது சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு ஒழுகாமல், பற்றாமல், தீருவதற்கு வழியே கிடையாது. இது மனோதத்துவம்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி: “The doctor dresses the wound and God heals it". அதாவது மருத்துவர் காயத்திற்குக் கட்டுப் போடுவார், ஆனால் கடவுளே குணப்படுத்துவார்.

திருமூலரில் சில உதாரணத்தைத் தர விரும்பி, தெய்வத்தின் சிறப்புக்களைப் பார்க்கும் போது ஒவ்வொன்றும் முத்துக்களாகத் தெரிகின்றன. எனவே மிகவும் பொருத்தமானவையாகத் தோன்றியவற்றை மட்டும் அதிகமாகத் தோன்றினும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

சைவம்:
திருமந்திரம்: 5
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரை யானே.


திருமந்திரம்: 6
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.


திருமந்திரம்: 7
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே.


திருமந்திரம்: 8
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.


திருமந்திரம்: 22
மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.


திருமந்திரம்: 23
வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே.


திருமந்திரம்: 24
போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.


திருமந்திரம்: 25
பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே.


திருமந்திரம்: 26
தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமல மலர் மேலே
உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.


திருமந்திரம்: 27
சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.

திருமந்திரம்: 28
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன் ஆகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.


திருமந்திரம்: 29
காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...