Friday, June 12, 2009

திருக்குறள்: 5
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 5இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


பொழிப்புரை (Meaning) :
இறை எனும் மெய்பொருளைச் சேர்ந்து புகழ்ந்து புரிந்துணர்ந்துப் போற்றி ஒழுகுபவரிடம் அவர் அறியாமையால் விளைத்த நல்லவை, தீயவை எனும் வினைகளின் பயன்கள் சேர்வதில்லை.


விரிவுரை (Explanation) :

இரு வினைகளாகிய பாவ, புண்ணியம் அல்லது நல்வினை, தீவினை ஆகியவற்றுள் அறியாமைக் காலத்தில் சேர்ந்தவையானவை, இறைவனின் மெய்ப்பொருளை உணர்ந்து தெளிந்து நிற்போரைச் சேர்வதில்லை.

இருள் என்பது அறியாமையைக் குறிக்கிறது. அறியாமை எனப்படுவது ஒருவரின் முற் பிறவியின் செயல் என்றும் கொள்ளலாம் அன்றில் இப்பிறப்பின் அறியாமையால் செய்யும் வினைகள் எனவும் கொள்ளலாம். சேர் என்பதால் அதை சேர்ந்த என்று இறந்த காலத்திற்கும், சேருகின்ற என்ற நிகழ் தொடர்ச்சிக்கும் அல்லது எதிர் காலத்திற்கும் கொள்ளலாம் என்பது வள்ளுவரின் நுணுக்கம்.

இறைவன் பொருள்சேர் என்பது இறைவனின் மெய்ப்பொருளை உணர்வது. அதாவது உயிர் ஐம்புலன்களில் பற்று அறுத்து, மாயை அற்று, அவை தம்மைத் தொடராத் தன்மையும் உணர்ந்து பேரின்பத்தைத் துய்க்கும் நிலை. அவ்வமயம் உயிருக்கு ஆன்மாவின் உண்மை நன்கு புலப்படும்; உயிரானது தத்துவப் பிணைப்புக்களிலிருந்து விடுபட்டு, அகவிருள் நீங்கி உள்ளுணர்வு பிறத்தலால் நாத முடிவுலுண்டான மெஞ் ஞானத்தைப் பெறும். அத்தகைய நிலையை அறிந்து, அதிலேயே ஒன்றி இசைந்து (புகழ்ந்து) நிற்போருக்கு, அவர்தம் பாவ, புண்ணியங்கள் தொடர்வதில்லை.


குறிப்புரை (Message) :

இறையெனும் மெய்ப்பொருளைப் பற்றி, அதன்பாலுள்ள புகழ்ச்சியினைப் புரிந்து போற்றி வாழ்வோருக்கு, அவர்தம் வாழ்வில் முன்செய்ப் புண்ணிய, பாவங்களின் தாக்கம் சேராது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

இருள்: விளங்காதவை, வழிதெரியாதவை போலிருக்கும் அறியாமை
இரு வினை: புண்ணியம், பாவம் அதாவது நல்வினை, தீவினை
புகழ்: இசை, போற்று. (இசைக்கு ஒருங்குதல், ஒத்துப்போதல் என்பதும் பொருள்)


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 2693
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

திருமந்திரம்: 2854
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.


கன்மங்கள் (வினைகள்) மூன்று: 1. சஞ்சித கன்மம் 2. பிரார்த்த கன்மம். 3. ஆகாமிய கன்மம். இவை தமிழில் முறையே 1. தொகை வினை, இருப்பு வினை 2. துவக்க வினை, நுகர் வினை. 3. நிகழ்வினை என ஆகும். எனவே இவற்றின் ஒவ்வொன்றிலும் இரு வினைகளாகிய பாவ, புண்ணியம் எனும் நல்வினை, தீவினைகள் இருக்கும்.

உலகத்திலுள்ள உயிர்களின் மலம் நீக்கி அருள் செய்வதற்காக உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப அருவம், உருவம், அருஉருவம் எனும் திருமேனிகளில் ஒன்றைத் தாங்கி இறைவன் அருள் செய்வான் என்று குறிப்பிடுகின்றது சைவ சித்தாந்தம்.

திருமூலர் உயிர்கள் இறைவனை அடையப் பின்பற்றும் சைவ நெறியினை சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ் சைவமென நான்றாகப் பிரித்துப் பேசுகின்றார். இவற்றை விளக்கின் மிகவும் விரியும் எனவே இங்கே அவற்றிற்குள்ளான அடி நாதமாகிய ’இருவினை ஒப்பு மலபரிபாகம்’ என்பதை மட்டும் பொருத்தம் கருதிப் பேச விளைகிறேன்.

பதி(இறைவன்), பசு(ஆன்மா, அசித்து), பாசம் (சித்து) இயல்புகளின் வேற்றுமை நீங்கி, மல மாய கன்மங்களாகிய குற்றம் அறுத்தலால், அதாவது இருவினை யொப்பு மலபரிபாகம் பெற்ற உயிரே வீடுபேற்றுக்குத் தகுதியுடையது என சிவாகமங்கள் கூறுகின்றது.

ஆசாரியன் செய்யும் தீக்சையினால் சஞ்சித கன்மம் அழியும். உடலுள்ள வரையில் இன்ப துன்பங்களைத் துய்ப்பதனால் பிரார்த்த கன்மம் நீங்கும். குருவருளாலும், திருவருளாலும் உண்டாகும் ஞானத்தின் மேலீட்டால் ஆகாமிய கன்மம் அழிந்தொழியும். இருவினை ஒப்புக்கு உடல் முன்னிலையன்று. இன்பத்தில் விருப்பும், துன்பத்தில் வெறுப்புமற்று இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்கின்ற நடுவுநிலையாகிய சாந்தம், இதுவே பக்குவநிலை (சிவோகநிலை).

திருமந்திரம்: 1501
இருவினை யொப்பில் இன்னருட்சத்தி
குருவெனவந்து குணம் பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன் செய்லற்று
திரிமலந் தீர்ந்து சிவன வனாமே.


குருவையும், சிவலிங்கத்தையும், சிவனடியார்களையும் கற்றார் மனம் போலக் கசிந்துருகி வழிபட்டால் பிறவித் துயர் நீங்கும். இலிங்க வழிபாட்டால் ஆணவமலம் நீங்கும். குருவழிபாட்டால் மாயமலம் கெடும். சங்கம (சிவனடியார்) வழிபாட்டால் கன்மமலம் நீங்கும். இவ்வாறு கடைப்பிடித்து ஒருவர் மலங்கள் நீங்கப்பெறலாம் என்பது திருமூலர் காட்டும் திருநெறி. இம்முத்திற வழிபாட்டையும் சீவன் முத்தர்களாக விழங்கிய நால்வர் பெருமக்களும் பிறசான்றோர்களும் செய்து சிறப்புற்றனர்.

சாக்த நெறியிலும் திருமூலர் “அதுஇது வென்றவமே கழியாதே, மதுவிரி பூங்குழல் மங்கை நல்லாளைப், பதிமதுமேவிப் பணிய வல்லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிடலாமே” என்கிறார்.

மலங்கள் அழிவதில்லை, மலங்களின் ஆற்றல் மட்டுமே நீங்கும் என்பது சித்தாந்த உண்மையாகும்.

திருமந்திரம்: 258
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே.

திருமந்திரம்: 610
உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசு உடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல் சேரல் ஆமே.


குறிப்பு (Note) :
வினாயகப் பெருமானை வழிபடும் முறை திருவள்ளுவர் காலத்துகுப் பிறகே சைவத்திலும் இன்னும் வெகு காலத்திற்குப் பிறகு வைணவத்திலும் தோன்றியது என்கிறார்கள். வினயாகரையும் ஒரு ஆழ்வாராகப் பிற்காலத்தில் கொண்டும் இருக்கிறார்கள் வைணவர்கள். மாப்பிள்ளை வினாயகர் என்பதும் உண்டு.

நகரத்தார்கள் எனப்படும் பிரிவினர் மரகத வினாயகரைக் கும்பிடும் வழக்கத்தைப் பின்பற்றிய சமூகத்தார், அதாவது இன்றைய செட்டிநாட்டிலுள்ள நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் என்பவர்கள். நடுநாட்டில் (காஞ்சி) அவர்கள் மரகத வினாயகரைப் பின்பற்றிய காலம், பொதுவாகச் சொல்லப்படுகின்ற வாதாபியிலிருந்து வினாயகரைக் கொண்டுவருவதற்கு முன்பானது என்றும் சொல்லலாம். காரணம் யானை முகத்தோனுக்கும், யானை முகம் கொண்டே அவர்கள் வணங்கி இருப்பினும், யானை முகம் அல்லாத வழிபாடும் இருந்ததற்கான சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. உதாரணத்திற்கு அருள்மிகு ஆதி வினாயகர், திலதர்ப்பணபுரி எனும் இடத்தில் இருக்கும் மூலவர் யானைமுகம் அற்ற வினாயகர்.

இங்கே வினாயகரைப் பற்றி நான் பேச வேண்டிய காரணம், வினாயகர், விக்னேஸ்வரர் விக்னங்களை அகற்றும் வல்லமை பெற்றவர் என்று போற்றப் படுவதால். அதாவது எந்தக் காரியத்தைத் துவங்கும் முன்பும் வினாயகனைத் தொழுதால் எந்த விக்னங்களும், வில்லங்களும், தடைகளும் இல்லாமல் காரியம் சித்தி பெறும் என்பது ஐதீகம். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தோமானால் வினாயகரை வணங்குவதால், வெள்ளிக் கொம்பன் வினாயகனைத் தொழ துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே என்பது மூத்தோர் சொல் வாக்கு. அதாவது முற்பிறவி வினைகளைக் களைபவர் வினாயகர் என்கிறார்கள். பிறகு எல்லாமே புதுக் கணக்குத்தான்.

இதையே வழக்கமாகக் கொள்ளவே, பிள்ளையார் சுழி எனும் ‘உ’ என்பதை எழுதியே எதையும் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. பிள்ளையார் சுழி என்பது, தொப்புள் கொடித் தொடர்பே போல் ஒவ்வொரு கருத்திற்கும் ஆரம்பமாகின்றது என்பது சிலர் சொல்லும் விளக்கம். உகாரத்தை முன்னிலைப் படுத்தியது ஓம் எனும் பிரணவ மந்திர ஒலியின் நடு ஒலி அது என்பதாலும் இருக்கலாம். ‘உ’ எனும் எழுத்து என்பது உண்மையில் நம் நெற்றிச் சக்கரத்தில் இருக்கும், பிருவ நடுவில் கிட்டும் ஞான முடிச்சு என்பது என்றும் கொள்ளலாம்.

ஆக பிள்ளையாரைத் தொழுது ஒவ்வொரு முறையும் காரியத்தைத் துவக்கினால், முன்னிரு வினைகளின் தாக்கம் இல்லாது காரியம் சித்தி ஆவதுடன், நடப்பு வினையிலும் தடங்கல்கள் இலாதே காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதாவது எதை எண்ணுகின்றோமோ அதே ஆவது என்பதற்கிணங்க, துவங்கும்போதே நாம் என் முன்வினைகளை இக்காரியத்திலே கலக்காதே எனக்கு இந்த வாழ்வை, இச் செயலை வெற்றிபெற வேண்டும் எனும் நோக்கமே அதைப் பெற்றுத் தருவது, நம்பிக்கைகளில் சாத்தியம் தானே.

வினாயகரைப் பற்றியும், இதன் தத்துவங்கள் பற்றியும் இன்னும் விபரங்கள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றைப் பதித்தால் நன்றி கடப்பாடுடையவன் ஆவேன். நன்றி.0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...