Monday, June 22, 2009

திருக்குறள்: 21

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 21


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


பொழிப்புரை (Meaning) :

ஒழுக்கத்தின் பால் நின்று துறந்தவர்களின் பெருமை, பெருமைகளில் எல்லாம் சிறந்தது எனக் கொள்ள வேண்டும் என்பது அற நூல்களின் துணிபு.


விரிவுரை (Explanation) :

உலகப்பற்றை நீத்து நல் ஒழுக்கங்களை ஒழுகி வாழ்ந்த துறந்தவர்களாகிய சான்றோர்களின் பெருமையானது, பெருமைகளிலெல்லாம் தலை சிறந்ததென அறநூல்கள் துணிந்து சொல்லும்.

ஒழுக்க நெறி நின்ற பற்றற்ற சான்றோர்களின் பெருமையையே சிறப்பானது என்றும் தேவையானது என்றும் அற நூல்கள் துணிந்து கூறும்; மற்றவர்கள் எல்லாம் அத்தகைய நூல்களால் கருதப்பட மாட்டார்கள் என்பது உட்பொருள்.

ஒழுக்கத்தையே நீத்தார் என்போர் உலகத்தாலேயே மறக்கப்பட்டு விடுவர். அவரிடம் ஏது பெருமை அறநூல்கள் பேச?

நூல்களில் எழுதி வைத்தல் வருங்காலச் சந்ததியினர் முன்னோரின் பெருமைகளைப் படித்து அதன் மூலங்களையும் உணரத்தானே.


குறிப்புரை (Message) :

காலங்களைத் தாண்டிய நூல்கள் கூறும் சிறப்பான பெருமை, அற நெறிகளை ஒழுகி பற்றற்ற வாழ்வினைப் பேணும் பெருந்தகையாருக்கே உண்டு.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

விழுப்பம் - ஆசை, குலம், நன்மை, மேன்மை, சிறப்பு
பனுவல் - நூல், ஆகமம், பஞ்சிநூல், கல்வி, புலமை, கேள்வி


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 1457
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.

திருமந்திரம்: 1620
மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

திருமந்திரம்: 1702
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திரம்: 2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

ஔவையார். நல்வழி: 3
இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங் கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

ஔவையார். நல்வழி: 7
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...