Friday, June 12, 2009

திருக்குறள்: 8

அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 8அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது.


பொழிப்புரை (Meaning) :
அறக்கடலாகிய அகத்தே குளிருடைய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து ஒழுகுபவரைத் தவிர மற்றவர்கள் மற்றைய கடல்களாகிய பொருட் கடலையும், இன்ப சாகரத்தையும் கடக்க இயலாது.


விரிவுரை (Explanation) :

அறம், பொருள், இன்பம் எனும் கடல்களைக் கடப்பதே மனித வாழ்வின் நோக்கம். எனவே அறமாகிய முதற் கடலினைத் தாண்டாது மற்றவற்றை கடக்க இயலாது என்பது பொருள், இதானால் அறம் என்பது இம்மூன்றுள் தலையானது என்பது நுணுக்கம்.

எனவே அத்தகைய அறம் எனும் பெருங்கடலை இறைவனாக்கி வள்ளுவர் அதையும் அகத்தே தண்ணளியனாக்கி, வேய்ங்கடந்தோனாக்கி அவர்தம் பாதங்களைப் பணிந்து ஒழுகாதவர்களுக்கு மற்றைய கடல்களைக் கடக்க இயலாது என்று தெளிவு செய்கிறார். அதில் ஈண்டு பெறுவது முதலில் அறக்கடலெனும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து ஒழுகி அதைக் கடக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களே மற்றைய கடல்களைக் கடக்க இயலும் என்பதே.

இதில் அறத்தின் முக்கியத்துவம் மட்டுமன்றி, எதிலும் ஒரு வரிசைக்கிரமமாக வெற்றி பெற வேண்டும் என்பதும் மறை பொருள்.

அந்தணன் என்பது பொருட்பற்றோ, காமத்துப்பற்றோ அன்றி அறத்தை மட்டுமே ஒழுகி எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டோன் என பின்னர் நீத்தார் பெருமையில் விளக்கம் தருவதைப் புரிந்து கொண்டால், அத்தகைய தன்மை கொண்ட அருட் கடலாகிய இறைவனை என்பது விளங்கும்.


குறிப்புரை (Message) :

அறமெனும் கடலாகிய இறைவனைச் சார்ந்து ஒழுகியவர்களே மற்றையக் கடல்களாகிய பொருள், இன்பம் என்பவற்றைக் கடக்க இயலும். அறம் செய்யாதாருக்குப் பொருளும், இன்பமும் நிலைக்காது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

ஆழி : கடல்
அந்தணன்: சான்றோன், இறைவன், அகத்தே தண்மையானவன்


ஒப்புரை (References) :

அறம், பொருள், இன்பத்தில் தலையாயது அறம். எனவே அதனை முதலில் கடந்து, அறமே வடிவாகிய இறைவனின் பாதங்களை ஒழுகி மற்றைய கடல்களைக் கடத்தல் அவசியம் என்கிறார்.

’ஆழி மழைக் கண்ணா’ என்று விஷ்ணுவை ஆண்டாள் அழைப்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

சமயங்களையும், சாதிகளையும் சாராத வள்ளுவர் அற ஆழி அந்தணன் என்பதன் காரணம் அவற்றின் சார்பற்ற பயன்பாட்டினைக் குறிக்கவே. கடவுள் வாழ்த்தில் கடவுளை எந்தச் சமயத்திற்கும் சாராது குறிப்பிடவே வெவ்வேறு பொது நாமங்களில் இறைவனை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இதைப் போலவே இலக்கியங்களில் ஆரியன் என்பதும் இறைவனை அழைக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் ’மேன்மைமிக்கவனே’ என்பதாகும்.

திருமந்திரம்: 195
ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே.


திருமந்திரம்: 258
திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே.


திருமந்திரம்: 259
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழிகொள்ளும் ஆறே.


திருமந்திரம்: 260
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.


திருமந்திரம்: 262
அறம் அறியார் அண்ணல் பாதம் நினையுந்
திறம் அறியார் சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே.


திருமந்திரம்: 267
இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே.


திருமந்திரம்: 273
ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறி கொடு கொங்கு புக்காரே.


சிவவாக்கிய சித்தர்: 8
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணும் நீ நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...