Wednesday, June 24, 2009

திருக்குறள்: 23

அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 23


இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.


பொழிப்புரை (Meaning) :

இகம், பரம் எனும் இரண்டின் வாழ்வு வகை அறிந்து ஆராய்ந்து அறமாகிய துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே நிறைந்து விளங்குகின்றது இவ் உலகில்.


விரிவுரை (Explanation) :

பிறப்பு, வீடு என்னும் இரண்டினால் நல்லவை, கெட்டவை, இன்பம், துன்பம், மறம் அறம் என்ற வகைகளை, அவற்றின் கூறுபாட்டை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவறத்தைப் பூண்டவர்களின் பெருமையே, இவ் உலகத்தில் உயர்ந்து நிறைந்து நிற்கின்றது.


குறிப்புரை (Message) :

அறிவின்பால் உணர்ந்து துறவறம் மேற்கொண்டவர்களே உலகின்பால் உயர்ந்த பெருமைக்கு உரியவர்கள்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பிறங்குதல் - உயர்தல், பிரகாசித்தல், ஒலித்தல், நிறைதல்


ஒப்புரை (References) :


திருமந்திரம்: 143
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

திருமந்திரம்: 1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே.

திருமந்திரம்: 2338
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.

ஒவையார். நல்வழி: 28
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...