Sunday, June 28, 2009

திருக்குறள்: 27


அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 27



சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே - உலகு.


பொழிப்புரை (Meaning) :

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து புலன் நுகர்வுகளால் அவற்றின் இயல்புக் கூறுபாட்டு வகைகளை ஆய்ந்து, அறிந்து, உணர்ந்து அதை அடக்கி ஆளத் தெரிந்தவனின் அறிவிற்கே மட்டுப்படும் உலகம்.


விரிவுரை (Explanation) :

ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுபடுத்தவும் அதன் வகைகளை அறிந்த யோகியர் போன்றும் துறவிகளுக்கே அவற்றை ஐம்பூதங்களுக்குத் தொடர்புப் படுத்தி அண்டத்தின் நிலையும், உலகின் நிலை விளங்குவதோடு கட்டுப்படுத்தவும் இயலும்.

உலகைக் கட்டுப்படுத்துவது என்பது அதன் ஐம்பூதங்களுக்குரிய இயல்புகளை மட்டுப்படுத்த அல்லது மாற்ற இயலும் என்பதாகும். அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (ஆகாயம்) க்கும் ஐம்புலன் நுகர்சிக்கும் உள்ள இயற்கைத் தொடர்பினை உணர்ந்து கட்டுப்படுத்தத் தெரிந்த துறவிக்கு, பிண்டத்திலிருந்து அண்டத்தைக் கட்டுப்படுத்த இயலும் என்பதாகும். உதாரணத்திற்கு யோகிகளால் உஷ்ணத்தை உண்டாக்கவும், மழையை வருத்தவும் இயலும் என்பது அறிந்ததே. உண்மையில் யோகிகளுக்கான தலைமையாகிய இறையின் கட்டுப்பாட்டிலேதான் இறுதியில் இயற்கை இயங்குகின்றது என்பதும் மறை பொருள்.

பிண்டம் எனப்படும் மனிதனின் உடம்பும், அண்டமும் ஐம்பூதங்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதும், எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐம்புலன் குணங்களுக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி (விசும்பு) ஆகிய ஐம்பூதங்களுக்கும் இயற்கையிலேயே தொடர்பு உண்டு என்பது சித்தர் சித்தாந்தம். அதாவது ஐம்புலன்களுக்கான ஐம்பொறிகளும் ஐம்பூதங்களின் கலவையால் ஏற்படுத்தப்பட்டவை என்பது சித்தர்களின், யோகிகளின் துணிபு. ஐம்புலன் குணங்கள் தன் மாத்திரைகள் எனவும், சைவ தத்துவங்கள் 96 எனவும், அதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம், அதனுடன் சேர்த்த மூலத்துடன் (பிரக்ருதி) தத்துவங்கள் 25 என்று சுருக்கியும் திருமூலர் குறித்துள்ளார். இவற்றின் விளக்கத்தை சித்தர் நெறிக் களஞ்சியம் எனும் பகுதியில் காணவும்.

இவ்வாறாக அத் தத்துவங்களையும், பிரபஞ்சத்தின் தத்துவங்கள் அனைத்தையும் வள்ளுவர் சுருக்கி ஐம்புலன் தன்மாத்திரைகளைக் கட்டுப்பட அறிந்தவர் உலகத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுவர் என்று சூட்சும சூத்திரத்தைக் கூறுகின்றார்.

ஆக ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்தவனிற்கு உலகத்தோடு இசைந்து ஒழுகவும், தனக்குச் சாதகமாக ஐம்பூதங்களை இயக்கவும் தெரியும். எனவே உலகைக் கட்டுப்படுத்துவது என்பது, அதை நேரெதிராகச் சுழற்றக் கோருவது போன்ற வாதங்களை ஐம்புலன் அறிந்தவர் ஒழுகார் என்பதும் துணிபு.

அன்றில் எளிதாக, ஐம்புலன் தன்மாத்திரைகளின் வகை தெரிந்தோருக்கே அதாவது கட்டுப்படுத்தத் தெரிந்த பற்றற்ற துறவியருக்கே உலகையும் அறியவும் இசைந்து ஒழுகவும் தெரியும் என்றும் கொள்ளலாம்.


குறிப்புரை (Message) :

ஐம்புலனைக் கட்டுப்படுத்த அறிந்த யோகிகளாகிய துறந்தோருக்கு இவ் உலகம் வசப்படும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கட்டே - கட்டுப்பாட்டிலே


ஒப்புரை (References) :

திருமந்திரம்: 135
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

திருமந்திரம்: 137
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

திருமந்திரம்: 140
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.

திருமந்திரம்: 735
அண்டஞ்f சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ்f சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே

திருமந்திரம்: 736
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே

திருமந்திரம்: 1675
தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திரம்: 2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

திருமந்திரம்: 2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணு நீரனல் காலொடு வானுமாய்
விண்ணு மின்றி வெளியானோர் மேனியே.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...