Friday, June 12, 2009

திருக்குறள்: 6
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 6பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


பொழிப்புரை (Meaning) :
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கையினை அறுத்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலைபெற்று நீடித்து வாழ்வர்.


விரிவுரை (Explanation) :

ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என இந்திரிய வாயில்கள் மூலம் பெறும் ஐந்து அவாவினையும் அறுத்தவனின் உண்மையான ஒழுக்க நெறியினைக் கடைப் பிடிப்போர் உலகில் நீண்ட வாழ்வினைப் பெறுவர்.

பொய் தீர்த்த என்பது வெறும் உண்மையல்ல; பொய்யினைப் பரிசோதித்து வென்ற என்ற பொருள்படும். எனவே அத்தகைய உண்மையானது இயற்கையிலேயே ஆண்டவன் பால் மட்டுமே உள்ளது.

நீடு வாழ்வர் என்பது நீண்ட வாழ்வு பெற்று இன்புற்று வாழுவர் என்பது பொருள். மேலும் நீண்ட வாழ்வு என்பதற்கு சித்தர்கள் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வையும் குறிக்கும்.


குறிப்புரை (Message) :

ஐவகைப் புலன் இன்பங்களைத் துறந்து இறைவன்பால் உண்மையான ஒழுக்க நெறியைப் பின்பற்றினால் நீண்டு நிலைத்து வாழலாம்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

பொறிவாயில்: புலன்கள், இந்திரிய வாயில்
ஐந்தவித்தான்: ஐம்புலன் அவாவினை அறுத்தான்
பொய்தீர்த்த: மெய்யான


ஒப்புரை (References) :

ஐம்பொறி சம்பந்தமான விளக்கத்தை இங்கே காண்போம். இவை சைவ சமயத்திலேயே மிகவும் தெளிவு பெற்றிருப்பதாய் அறிகின்றேன். இருப்பினும் அவை மிகவும் நுட்பமும், விரிவும் கொண்டவை. எனவே இவ்விபரங்கள் தேவையற்றோர் இப்பகுதியை இங்கேயே விட்டுவிடலாம்.

சைவத் தத்துவங்கள் மிக மிக ஆழமானவை. சித்தர் இலக்கியங்களுள், திருமூலர் திருமந்திரத்தையும் வெளிப்போக்காகப் புரிந்து கொள்ளுதல் இயலாது. அவற்றிற்கான ஆசிரியர்களின் விளக்கங்களன்றி அவற்றில் ஆழ்ந்து கிடக்கும் பொருட்கள் வெளிவருவதற்கு வாய்ப்பே கிடையாது.

சைவ விளக்கம்:
திருமூலர் தன் அனுபவ வாயிலாகக் கண்ட தத்துவங்கள் 4,00,48,500 எனக் கூறி, அதனைச் சுருக்கி, தொண்ணூற்றாறு என வகைப்படுத்தி, அதனையும் சுருக்கி இருபத்தைந்து எனக் குறிப்பிடுகின்றார்.

திருமந்திரம்: 2138
நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிர
மேலுமோ ரைந்து நூறுவேறா யடங்கிடும்
பாலவை தொண்ணூறோ டாறாட் படுமவை
கோலிய ஐயைந்துளாகும் குறிக்கிலே.


ஆன்ம தத்துவங்கள்: 24
பூதங்கள் ஐந்து: நிலம், நீர், தீ, வளி, விசும்பு (மண், புனல், அனல், கால், வான்)
தன்மாத்திரைகள் ஐந்து: ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பன. மேற்கூறிய பூதங்கள் ஐந்தின் சூக்கும நிலையே தன்மாத்திரைகள். இவையே பஞ்ச பூதங்களுக்குக் காரணமாயும், அவற்றின் உதவியோடு இந்திரியங்கள் நுகர்ச்சியில் தொழிற்பட ஏதுவாக இருக்கின்றன.
ஞானேந்திரியங்கள் ஐந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியங்கள் ஐந்து: வாய், கால், கை, எருவாய், கருவாய் என்றும் வாக்கு, பாதம், பாணி, பாயும், உபந்தம் எனவும் குறிப்பிடப்படும். இவை ஐம்பூதங்களையும் பற்றுக்கோடாகக் கொண்டு பேசல், நடத்தல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் என்னும் தொழில்களைச் செய்யும்.
அந்தக் கரணங்கள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன. இந்திரியங்களால் புறத்தே செயல்பட, அவைதரும் பதிவுகளை அகத்தே தொழிற்படுத்தும் அகக்கருவிகள் இவை. மனம் யாதானும் பொறியுணர்வைப்பற்றி இன்னது இன்னதாகலாம் என ஐயநிலையில் நிற்கும். புத்தி அதனை இன்னது என நிச்சயிக்கும் , இதைச் சவிகற்பக் காட்சி என்பர். அக்காட்சிக்கு வேண்டிய முயற்சிக்கு உடம்பில் வாயுக்களையும், இந்திரியங்களையும் ஊக்குவிப்பது அகங்காரம்.

அங்ஙனம் வந்த நிச்சய உணர்வை முன்னரே பெற்றுள்ள உணர்வுகளோடு இணைத்து அதனைப் பொருட் பெற்றி வடிவில் உட்கோடல் சித்தத்தின் தொழில். ஆன்மா, மனம் முதலிய கருவிகளைக் கொண்டு உணரும் போது பற்றுதல், நிச்சயித்தல், ஒருப்பட்டு எழுதல், சிந்தித்தல் என நான்கு வகைப்படும். புத்தி இன்னதென்று நிச்சயிக்கும்போது அதனை முன்னைய பழக்கம் பற்றி வினைக்கீடாக அதை தனக்கு உறவாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ உணரும். அந உணர்தலால் இன்பம், துன்பம், மயக்கம் எனுக் குணங்கள் ஒன்று பரிணமிக்கும். அதையே ஆன்மா உணரும்.

வித்தியா தத்துவம்: ஏழு. ஊழி, ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் எனவும் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனவும் குறிக்கப்பெறும். இவற்றுக்கான விளக்கங்கள் மிகவும் விரிவானவை எனவே இங்கே குறிப்பிட இயலாது.

மாயைப் பற்றி மட்டும் கொஞ்சம். மாயை எனப்படுவது மலங்களுள் ஒன்றன்று. அஃது தூலம், சூக்குமம், பரம் என மூவகைப்படும். தூலமாய் நின்ற அவத்தையில் பிரகிருதி மாயை எனவும், சூக்குமமாய் நின்ற அவத்தையில் அசுத்தமாயை எனவும், பரமாய் (அதிசூக்குமமாய்) நின்ற அவத்தையில் சுத்தமாயை எனவும் அழைக்கப்படும்.

சிவதத்துவம்: ஐந்து. சுத்தமாயை (தூமாயை)யினின்றே சிவ தத்துவங்கள் ஐந்தும் தோன்றின. இவை சுத்த தத்துவங்கள் எனப்படும். சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்திதத்துவம், சிவதத்துவம்.

இதுகாறும் கூறிவந்த முப்பத்தாறு தத்துவங்களும் அகக் கருவிகள் எனப்படும்.

புறக்கருவிகள் : 60. அவற்றின் கூறுகள் கீழ்க்கண்டவாறு.

நிலம்: மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை 5
நீர்: நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் 5
தீ: ஊண், உறக்கம், உடனுறைவு, உட்கு, மடி 5
வளி: ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் 5
வெளி: வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை 5
செய்தற்கருவி: பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறுதல் 5
அறிவுவளி: உயிர்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவு காற்று 5
தொழில்வளி: தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று 5
நாடி: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச் செவி நரம்பு, உள் நாக்கு நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு 10
ஓசை: நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை 4
முப்பற்று: பொருட்பற்று, புதல்வற்பற்று, பொய்யுலகபற்று 3
(மண், பெண், பொன்)
முக்கணம்: அமைதி, ஆட்சி, அழுத்தல் 3
இவ்வாறாக புறக்கருவிகள் 60
(உட்கு=பயம், இவறன்மை=குரோதம், செருக்கு=ஆணவம்)

ஆக மொத்தம் தத்துவங்கள் தொண்ணூற்றாறு என்பர்.

இவற்றை ஞானாமிர்தம் எனும் சைவ சித்தாந்தப் புத்தகத்தில் இலக்கியச் சுவையோடு காணலாம்.

திருமந்திரம்: 2107
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ் செய்திருந்த புறநிலை
ஓதும் மலங்குண மாகுமா தாரமோ
டாதிய வத்தை தொண்ணூற் றாரே.

சிவவாகிய சித்தர்: 198
பொய்க் குடத்தில் ஐந்தொதுங்கி போகம்வீ சுமாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்திருப்பதே.

சிவவாக்கிய சித்தர்: 213
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும்அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே.

சிவவாக்கிய சித்தர்: 262
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்தும் நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...