Friday, June 12, 2009

திருக்குறள்: 9
அதிகாரம்: 1. கடவுள் வாழ்த்து. திருக்குறள்: 9கோள் இல் பொறியிற் குணம் இலவே-எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை.


பொழிப்புரை (Meaning) :

இயக்கமற்ற ஐம்பொறிகளினால் பயன் ஏதும் இலாததைப் போன்றே, எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனது தாளை வணங்காத தலையும் பயனற்றது.


விரிவுரை (Explanation) :

இயங்கு கோள் அற்ற பொறிகளினால் பயன் இராதே; அதைப் போன்றே எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் தாளை வணங்கி ஒழுகாத தலையும் பயன் தராது.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில் குறைபாடு இருப்பின் அவற்றால் பயன் இராது. அதைப்போன்றே இறைவனைச் சிந்தியாத, வணங்கி ஒழுகாத தலையினாலும் பயன் இராது. இதில் தலை என்பதற்கு தலைமை என்றும், சிந்திக்கும் சக்தி என்றும், தலை எனும் உடலின் முக்கிய அங்க உறுப்பையும் பொருள் கொள்ளலாம்.

உடலுக்குத் தலையானது தலை, எனவேதான் அதைத் தமிழில் தலை என்றார்கள். அத்தகைய தலையே இறைவனை ஒழுகாவிடின் பயனற்றது என்ற வள்ளுவரின் நயம் அறிவீர்களாக.

எண் குணத்தான் என்பதற்குச் சுலபமாக அதாவாது எளிதாக எண்ணிக்கையற்ற, ஒப்பற்ற பண்புகளைக் கொண்டவன் என்றுச் சொல்லலாம். ஆயின் எட்டு வகையான குணங்களை இறைவனுக்கான அடிப்படைக் குணங்களாக அன்றைய எல்லா மதங்களிலும் கூறப்பட்டிருப்பதால் அதையே திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

இறைவனின் எண் குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல் 2. தூய உடம்பினன் ஆதல் 3. இயற்கை அறிவு, உணர்வினன் ஆதல் 4.முற்றும் உணர்தல் 5. இயல்பாகவே பாசங்கள் நீங்குதல் 6. பேரருள் உடைமை 7.முடிவிலா ஆற்றல் உடைமை 8.வரம்பு இல் இன்பம் உடைமை.

(தன்வயத்தன், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலின்பம்)


குறிப்புரை (Message) :

உயரிய எண் குணங்களைக் கொண்ட இறைமையின் பாதங்களைப் பற்றித் தமது தலையால் கருதி வணங்கிப் போற்றி ஒழுகுதலே பயனுள்ள சிறந்த வாழ்வாகும். அல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

கோள் இல்: குறிக்கோள் அற்ற, செயற்கோள் அற்ற
பொறி: இந்திரியம்
குணம் இல: குணமற்ற, பயனிலாத


ஒப்புரை (References) :
திருமூலரும் தனது திருமந்திரத்தின் கடவுள் வாழ்த்தில் கடவுளிற்கு எண் குணத்தைக் குறிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமந்திரம்: 1 (கடவுள் வாழ்த்து)
ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு பார்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே.

திருவிளையாடல் திரைப்படத்தில் ஔவை பாடும் கண்ணதாசனின் பாடலும் இங்கே பொருத்தம் கருதி நினைக்கத்தக்கது. மேலே சொன்ன திருமூலரின் பாடலுக்கு ஓரளவு ஒத்துப் போவது. ஆனால் அவர் சொன்ன எட்டும் நாம் மேலே விளக்கப் பகுதியில் கண்டவாறு என்று அறியவும். திருமூலரின் ஒன்றிலிருந்து ஏழுவரைக்கும் ஆன விளக்கம் விரிவு கருதி இங்கே குறிக்கப்படவில்லை.

ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்றுதான் என்று சொன்னான்வன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்...


எண்ணற்ற குணத்தான் என்ற பொருள் தரும் பாக்கள்:
மாணிக்கவாசகர் : திருவாசகம்: 21
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

...
மாணிக்கவாசகர்: கீர்த்தித் திரு அகவல்.
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
...


அட்டாங்க யோகத்தைக் கடைப்பிடித்து சித்தர்கள் அட்டமா சித்தி கைவரப் பெற்றவர்கள் என்பார்கள். அட்டமா சித்திகளும் எட்டு என்பதால் இங்கே குறித்துள்ளேன். அவை எண் குணத்தைப் பிரதிபலித்தாலும் இறைவனின் எண் குணங்கள் இவற்றையும் மீறியது எனத் தெளியவும்.

1.அணிமா: நுண்மை, அணுத்தன்மை. அணுவினும் மிக நுண்ணிய வடிவு பெறல். சிறிதாதல்.
2.மகிமா: பருமை. மேருவினும் பேருருப் பெற்று நிற்றல். பெரிதாதல்.
3.லகிமா: மென்மை. சேறு முதலியவற்றில் இயங்கினும் அழுத்திலின்றிக் காற்றினும் மெல்லிய வடிவுற்று நிற்றல். இலேசாகுதல்.
4.பிராத்தி: விரும்பியதெய்தல். மனத்தால் விழையப்பட்டன அனைத்தும் விழைந்தவாறே பெறுதல். எல்லாவற்றையும் ஆளுதல்.
5.கரிமா: விண்டன்மை. புலன்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை. பொன் போலப் பளுவாதல்.
6.வசித்துவம்: கவர்ச்சி. உலகனைத்தையும் தன் வயமாக்கல். எல்லாரையும் தன் வசப்படுத்துதல்.
7.பிரகாமியம்: நிறைவுண்மை. கூடுவிட்டுக் கூடுபாய்தல்.
8.ஈசத்துவம்: ஆட்சியனாதல். பிரமன் முதலியோர் மாட்டும் தன் ஆணை செலுத்தி நிற்றல். அனுபவித்தல்.

சமண மதத்திலும் கடவுளை எண்குணத்தான் என்கிறார்கள். அவை:
1. முற்றுமுணர்தல் (எல்லையற்ற ஞானம்)2. முடிவிலா ஆற்றல் 3. எல்லையற்ற பார்வை 4. எல்லையற்ற ஒழுங்கு 5. அழியா இயல்பு 6. சார்பின்மை 7.பற்றின்மை 8.அருவத்தன்மை (உருவிலி)

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...