அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 11
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
பொழிப்புரை (Meaning) :
மழை கொண்டு உலகம் நின்று நிலையாக வழங்கி வருதலால், அதுவே அமிழ்தம் என்று உணரப் பட வேண்டியது.
விரிப்புரை (Explanation) :
மழையால்தான் இவ் உலகம் நிலைத்து நின்று சிறந்து விளங்கியும் வழங்கியும் வருகிறது. எனவே அந்த மழைதான் அதனை வாழ வைக்கும் அமிழ்தம், அதாவது உலகத்தின் உணவு என்று உணர வேண்டும். யார்? மனிதர்கள் தான். அவர்களே உணர முடிந்தவர்கள், உணர்வதை அறிய முடிந்தவர்கள். இதுதான் வள்ளுவரின் தீர்க்கதரிசனம். அத்தகைய அமிழ்தத்தை போற்றிப் பேணிக் காக்க வேண்டும் என்பது உட்பொருள்.
மனிதர்களே அத்தகைய மழைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக எதையும் செய்து விடாதீர்கள் என்பது அவர் விடும் மறைபொருள் எச்சரிக்கை. இன்றையக் காலத்தில் ஓசோன் லேயர் ஓட்டையும், உலக வெப்ப மயமாதலும் எல்லாம் மனிதர்கள் இயற்கையின் வளத்தைத் தவறான வகைகளில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட இயற்கைச் சமன்பாட்டுச் சீர் கேட்டின் விளைவே.
இனியேனும் காலம் தாழ்த்தாது, அத்தியாவசியத் தேவையான, இயற்கைக்கே உணவாகிய, அமிழ்தமாகிய மழையின் அவசியத்தையும், அதன் சிறப்பையும் அறிந்து உணர்வோமாக. அறிவது சிலசமயம் நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தாமதம் செய்வோம். ஆனால் உணர்ந்தால் அவற்றை உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம், முக்கியத்துவம் தருவோம் என்பதும் குறள் நுட்பம்.
மழையே உலகிற்கு அமிழ்தம் என்கிறார் வள்ளுவர். அமிழ்தமானது உயிர்த்திருக்க உண்ணும் உணவு, அதனின்று சாவா நிலையைத் தரும்; எனவே உலகம் நிலைத்து நின்று வழங்குகின்றது என்கிறார். அமிழ்தமானது அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டால் அதுவே விடமாகிவிடும் என்பதும்; காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டாலும் வீண் என்பதும், தேவைக்குக் குறைவாக உட்கொண்டாலும் நிலைத்து நிற்கப் பிரச்சினை ஆகும் என்பதும் அமிழ்தம் எனும் மருந்தினால் வள்ளுவர் சொல்லாமல் சொல்லும் கருத்துக்கள். மேலும் அமிழ்தம் என்பது விலைமதிப்பற்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
மழை நீர் சேகரிப்பின் மகிமை மழையின் அவசியத்தை உணர்ந்தால் விளங்கும். எனவே நீர் நிலைகளைப் பெருக்கி உலகம் உய்ய வேண்டும் என்பது வள்ளுவர் தரும் குறிப்பு என்று உணர்வோமாக.
குறிப்புரை (Message) :
மழையினாலேயே உலகம் காலங்களைக் கடந்து விளங்கி வருவதால், மழையே உலகம் உண்ணும் உணவு என்று உணரவும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
வான்: மழை
அமிழ்தம்: அமுதம், உணவு, உயிர்த்திருக்க கொள்ள வேண்டிய சாவா நிலைதரும் மருந்து, சோறும் நீரும் பாலும் கலந்த உணவு. அமிழ்தத்தை ஒரு முறை உண்டால் எப்போதும் சாவை நிலை என்பது பொய்யான கருத்து வடவர்களால் உண்டாக்கப்பட்டது. அமிழ்தம் தமிழின் அவிழ்தம் எனும் வார்த்தையின் திரிபு. மலர்ந்த சோற்றுச் சாதம்.
அம்மம், மம்மம் என்பவை அம்மைதரும் பால் உணவு.
அமுது, அமிழ்து என்பது உணவு. எனவே அமிழ்தம் என்பது தமிழ்ச் சொல்லே.
ஒப்புரை (References) :
திருமூலரும் திருமந்திரத்தில் ’வானச் சிறப்பு’ என்ற தலைப்பில் கீழுள்ளவற்றைப் பாடி இருக்கின்றார்.
திருமந்திரம்: 248
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.
திருமந்திரம்: 249
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...