அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 14
ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும்
வாரி வளம் குன்றிக்கால்.
பொழிப்புரை (Meaning) :
ஏர்கொண்டு உழமாட்டார் உழவர்கள், புயல் போன்று வாரி அடிக்கும் மாரியின் வளம் குன்றி விட்டால்.
விரிவுரை (Explanation) :
பருவ காலத்தில் நல்ல மழை வாரி அடித்துப் புயல் போல் விழுந்து வளம் செய்யாவிட்டால், ஏர் கொண்டு உழமாட்டாதவர்கள் ஆகி விடுவார்கள் உழவர்கள்.
நல்ல மழையால் தான் மண் உழுவதற்குத் தோதாகப் பதப்பட்டு வளப்படும். வெறும் தூற்றல் மழைஉழுவதற்குப் பயனற்றது என்பது சொல்லாப் பொருள். புயல் என்பது போன்ற மழையைச் சொன்னார்; புயலே அடிக்க வேண்டுமென்று சொன்னதாய் அர்த்தம் அல்ல.
உலகப் பிரச்சினையான உழவனின் பிரச்சினைகளை, விவசாயத்தின் உட் கூறுகளைத் தொட்டுப் பேசும் வள்ளுவரின் பாங்கு, அறிவு வியத்தக்கது. அவரின் உலக மேம்பாட்டுச் சிந்தனைக்கு, சமுதாய அக்கறைக்கு இது ஒரு உதாரணம்.
சென்ற குறளில் மழையே இல்லையென்றால் என்னவென்றுச் சொன்னவர், இங்கு போதுமான அளவில் மழையில்லை என்றால் பயன் இல்லை என்கின்றார்.
எனவே நல்ல மழை அடிக்கும்படியான அளவில் நாம் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தாமல் இருப்போமாக.
குறிப்புரை (Message) :
நல்ல மழை இல்லையென்றால், உழவருக்குப் பயனின்றி உழவுத் தொழில் குன்றிவிடும்.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஏர் - உழவுக் கலப்பை
ஒப்புரை (References) :
நல்ல மழை வேண்டுமென்று வேண்டுவோம்.
திருமந்திரம்:30
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.
சேக்கிழார், பெரியபுராணம்: 75
வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.
0 comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...