Friday, June 12, 2009

திருக்குறள் எனும் மாமறை
நூல் முகவுரை:

திருக்குறள் சமயச் சார்பற்ற வாழ்க்கை வழிமுறை நூல். இதுவே தமிழரின் வேதம். இது காலங்களைக் கடந்து நிற்பதோடு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களுக்கும் என்றென்றும் நிற்கக் கூடிய தன்மை தன்னகத்தே கொண்ட ஓர் ஒப்பற்ற காவியம்.

தனது பொது இறைமைத் தன்மையாலும், இலக்கியத்தோடு கூடிய வாழ்வு நெறிமுறையாலும், ஆழ்ந்து உணரப்பட்டு, அனுபவப்பட்டு, உயர்ந்த சிந்தனையால் தெளிவுற்று, திட்டமிடப்பட்டு ஆக்கப்பட்டமையாலும், தெய்வீகமும், மெய்யறிவும், கணிதங்களும், அறிவியலும், மனோதத்துவமும், வாழ்வியலும் பின்னிப் பிணைந்து அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலும் அறிந்து ஒழுகி மனிதன் வீடு பெறவேண்டும் எனும் உயர் வழிகாட்டுதலாலும், மனிதனாலேயே மனிதனுக்குச் சொல்லப்பட்ட நெறி முறை என்பதாலும், காலங்களுக்கு விமர்சனங்களைத் தாண்டி நின்ற பெருமையாலும் இதுவே புனிதத்தன்மை கொண்ட நான்மறை வேதம் என்று உணர்வோமாக.

இந்த அளப்பரிய ஈடு இணையற்ற வாழ்வு வழிகாட்டியைக் கொண்டு, நமது வாழ்வில் ஏற்படும் சந்தேகங்களுக்கு, மத மாச்சர்யங்களைக் கடந்த, நமது நல்லாசிரியரின் வழி முறைகளை அவ்வப்போது பார்த்துப் படித்து, நினைவிறுத்தி, வாழ்வின் எந்த விதச் சூழ்நிலையே ஆயினும் அதற்கு ஏற்ற குறளைத் தேடிப் பொருளறிந்து, அவர் தம் வழியினைப் பேணி நம் வாழ்வில் வெற்றி பெறுவோமாக.


நூல் ஆசிரியர் வாழ்த்து:

தனது கருத்துக்களால் இறையனார் என்றும், திருக்குறளால் பொய்யாமொழி என்றும் அறியப்படுபவர் அதன் ஆசிரியரான திருவள்ளுவர்.

திருவள்ளுவரின் மிகப்பெரிய சிந்தனையை அவரின் இறைவாழ்த்தினின்றும் நாம் கிடைக்கப் பெறுகின்றோம். ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம் என்பதை வலியுறுத்தும், தீர்ந்த தெள்ளறிவும், மதம் எனும் எச் சார்பு நிலையும் கொள்ளாது, இறையின் அவசியத்தையும், மாண்பையும், வாழ்வின் நோக்கத்தையும், வாழ்வு முறையையும் ஒருங்கே இங்கே பதித்து, மனித குலத்துக்கே இதுவே வேதம் என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளும்படி அமைத்து விடுகின்றார்.
இதுவே வள்ளுவனாரின் மாண்பு.

தான் என்பதோ, தான் சார்ந்த மதம் என்பதோ, தன் மொழிச் சிறப்பென்பதோ கிஞ்சிற்றும் வெளிக்காட்டிக் கொள்ளாது மனிதனிற்குத் தேவையான வழி முறையை வகுத்துக் கொடுத்துத் திருக்குறளைச் சமைத்த வகையில் திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற அறிஞராக, கவிஞராக, சித்தராக, முனிவராக, யோகியாக, நோய் தீர்க்கும் மருத்துவராக, மனநல மருத்துவராக, சமூகவாதியாக, சீர்திருத்தச் செம்மலாக, பேராசிரியராக, பெருந்தகையாக, நல் வழிகாட்டும் நண்பனாக அனைவரும் ஒருங்கே அமையப்பெற்று உலகத்தின் மிகச் சிறந்த சிந்தனை வாதிகளிலும் சிறப்பானவராகக் காணப் படுகின்றார்.

வள்ளுவரின் வள்ளுவத்தின் வலிமை அது விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டது என்று தன்னைச் சொல்லிக் கொள்ளாமல் தன்னைப் பரிசோத்தித்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தயங்காமல் சொல்லுவதே.

திருக்குறள்: 423
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


என்பது வள்ளுவரின் வாக்கு. என் மேல் சந்தேகம் கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்லாமல், அல்லது மேற்படி குறள் தனக்கல்ல மற்றவர்களுக்கே என்றெல்லாம் சொல்லாமல் தனது குறள் அனைத்தையும் விமரிசிக்கவும், பரிசோதிக்கவும், நம்பினால் ஒழுகவும் நம்பிக்கையோடு குறள் சொல்லுகிறது. அதன் வலிமை அவர் அறிவார். தான் சொன்னவை மாற்றமுடியாத சட்டங்கள் என்றும் எங்கும் அவர் பதியவும் இல்லை.


திருவள்ளுவர் ஒரு தமிழர் என்பதும், அவர் தன் சிந்தனையைத் தமிழ் மூலம் உலகிற்குச் சொன்ன வகையிலும் நாம் பெருமிதம் கொள்வதோடு, அவர்தம் வகுத்துக் கொடுத்த வழிமுறையான திருக்குறளைப் பின்பற்றி வாழ்வில் உய்வதே அந்த ஆசிரியருக்கு நாம் கொடுக்கும், காட்டும் நன்றி ஆகும். அவர் காட்டும் வாழ்வு முறையை மற்றவர்க்கும், ஏனைய மொழியினருக்கும் பரப்புவதே நம்மால் முடிந்த தொண்டும் ஆகும்.

- உத்தமபுத்திரா

1 comments:

V.Rajalakshmi said...

பாற்கடல் கடைந்து அமுதம் படைத்தான் யசோதா புத்திரன்!
திருக்குறள் ஆராய்ந்து குறள் அமுதம் படைத்தான் உத்தம புத்திரன்!குரலும்,குறளும் இணைந்த குறள் அமுதம்!

தமிழ் தொண்டென தன் தொண்டு செய்யும் தன்னலம் கொண்டோர் தரணியில்,
தமிழ் தொண்டு தான் தன் தொண்டென செய்யும் நன்னல உத்தம புத்திரர்!

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...