Sunday, June 14, 2009

திருக்குறள்: 13


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 13



விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி.


பொழிப்புரை (Meaning) :
வானம் இலாது பொய்த்து விடுமாயின், விரிந்து படர்ந்த கடல் நீர் சூழ்ந்திருந்தும் பயனிலாது வியத்தகு உலகத்தின் உள்ளே நின்று உழற்றும் பசி.


விரிவுரை (Explanation) :

விண்ணின்று வரும் மழையானது பொய்த்துவிட்டால் அதாவது தனது வழக்கத்தினின்று தவறி விட்டால், எவ்வளவுதான் கடல் நீர் சூழ உலகம் இருப்பினும், அதனுள்ளே இருக்கும் எல்லா உயிர்களுக்கும் உணவில்லாமையால் ஏற்படும் பசி எனும் நோய் உண்டாகி வாட்டி வருத்தி நிற்கும்.

உரிய காலத்தில் மழை பெய்யாது பொய்த்தால், உலகின் மூன்று பங்கு கடல் சூழ்ந்திருப்பினும் அதனால் பயனே இராது, உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிர்களுக்கு பசி எனும் உழற்றலைக் கொடுத்து வாட்டிவிடும்.

எனவே வானம் பொய்க்காது மழை தருமாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது உட்பொருள்.


குறிப்புரை (Message) :

மழை பொய்த்துவிட்டால், கடல்களே சூழ்ந்திருந்தாலும் உலகத்தை பசிப் பிணி பீடித்து வாட்டும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :

விண் - வானம், மேகம், விண்ணகம்
பொய்ப்பின் - பொய்த்தால், தவறினால்
விரிநீர் - விரிந்து படர்ந்த கடல் நீர்
வியன் - வியப்பான, ஆச்சரியமான


ஒப்புரை (Reference) :


சேக்கிழார், பெரியபுராணம்: 447 - 454
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் 447

மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன் 448

ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று 449

நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என 450

மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல் 451

செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற 452

மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார் 453

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம் 454

9 comments:

Anonymous said...

எவ்வளவுதான் கடல் நீர் சூழ உலகம் இருப்பினும், அதனுள்ளே இருக்கும் எல்லா உயிர்களுக்கும் !!!!,

மன்னிக்கவும், அதனுள்ளே என்பதை மாற்றி உலகினுள்ளே என எழுதினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்,[அதனுள்ளே என்பது கடலை குறிக்கிறதே என்பது என் எண்ணம்]

Anonymous said...

भूंद भूंद से बना है सागर,
भूजा नहीं सकता पियास!_वही
भूंद भूंद से बना है बदाल!
धरती को बनाया सीथल!

Anonymous said...

கடல் போல!
பயனில்லா சொத்து,பத்து,
உரிமை இல்லா சொந்தம்,பந்தம்,
அன்னையே!
கடனில்லா உன் அன்பு!
ஒரு துளி மழை போல!

Uthamaputhra Purushotham said...

@Anonymous
எவ்வளவுதான் கடல் நீர் சூழ உலகம் இருப்பினும், அதனுள்ளே என்றால் அஃது உலகத்தைத்தான் குறிக்கும் கடலை அல்ல. தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

நன்றி.

Uthamaputhra Purushotham said...

ஹிந்தியிலும், தமிழிலும் கவிதை எழுதியுள்ள @Anonymous அவர்களுக்கும், உங்களின் வருகைக்கும், பதிவிற்கும் நன்றிகள்.

Anonymous said...

திருவள்ளூவரே "உலகத்து உள் நின்று" எனத்தான் சொல்கிறார் நீங்களும் பொழிப்புரையில் "உலகத்தின் உள்ளே நின்று" எனத்தான் குறிப்பிட்டு இருக்கிங்க,
அதான்,
கடல் வேறு ,உலகம் வேறு என எண்ணிவிட்டேன், மன்னிக்கவும்

Uthamaputhra Purushotham said...

பரவாயில்லை. சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்.

Anonymous said...

Adamant!

Uthamaputhra Purushotham said...

???

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...