skip to main |
skip to sidebar
திருக்குறள்: 22
அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 22
துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்துஇறந்தாரை எண்ணிக் கொண்டற்று.
பொழிப்புரை (Meaning) :
துறந்தவர்களின் பெருமையை எத்துணை எனக் கூறுவதாயின், வையகத்தில் இதுவரையில் இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றதாகும்.
விரிவுரை (Explanation) :
வையகத்தில் இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று கணக்கிட சாத்தியம் அற்றது போன்றே துறந்து வாழும் சான்றோர்களின் பெருமையையும் அளக்கவே இயலாது.
இந்த உலகில் இதுவரையில் பிறந்தவர்களையும், இறந்தவர்களையும் கணக்கெடுப்பது இயலாதது. அதைப் போன்றே துறந்தவர்களின் பெருமையையும் கணக்கெடுக்க இயலாது.
இதில் ஈண்டு பெற வேண்டியது, அத்தகைய அளவிடற்கரிய சிறப்பானது முற்றும் துறந்த துறவிகளின், பற்றற்ற வாழ்வை ஒழுகும் சான்றோர்களின் பெருமையாகும்.
எதிலும் பற்றுடன் திகழும் சராசரி மனிதனின் வாழ்வில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
குறிப்புரை (Message) :
பற்றற்ற வாழ்வின் மேன்மை அளவிடற்கரியது.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
துணை - அளவு, ஆதரவு, ஆயுதம், இணை, உதவி, ஒப்பு, சகாயம், சல்லியம், சோடு
ஒப்புரை (References) :
திருமந்திரம்: 1615
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.
திருமந்திரம்: 1616
அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே
திருமந்திரம்: 2336
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.
திருமந்திரம்: 2865
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.
5 comments:
பற்றட்ட பிறவி யார்?
பிறப்பால் அல்ல பற்றற்றுத் திகழ்பவர் துறந்தவர்கள்; அதில் சிலர் இல்லற வாழ்வினைத் துறந்து துறவிகளாகத் திகழ்வதும் உண்டு.
பற்று அற்று திகழ்பவர் துறவிகள்..
சரி,பற்று என்றால் என்ன? எதன் மீதும் விருப்பம் இன்மை அதானே?
பற்று இல்லதா மானுடம் இல்லை என்கிறார்களே சிலர் அது?
////சரி,பற்று என்றால் என்ன? எதன் மீதும் விருப்பம் இன்மை அதானே?
பற்று இல்லதா மானுடம் இல்லை என்கிறார்களே சிலர் அது?
பற்று என்றால் பிடிப்பு என்று அர்த்தம்.
எனக்குப் பற்றே இல்லை என்னும் கொள்கை ஒருவர் கொண்டிருந்தால் கூட அதுதான் அவரது பற்று என்று நீங்கள் வாதிடக் கூடும்.
பிடிப்பு இல்லா வாழ்க்கை என்ற ஒன்றை உங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லையா? பரவாயில்லை. அதற்குத்தான் அருமையாக வள்ளுவர் ”பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று சொல்லி இருக்கிறாரே? பற்றே அற்றவன் இறைவன் என்னும் பொருளில்.
புளியம் பழம் ஓடும்போலும் என்றும் தாமரை இலைத் தண்ணீர் போலும் என்பதெல்லாம் சித்தர்களுக்கு மாத்திரம் அல்ல. எந்த நிலையிலும் நடு நிலைத் தவறாத நீதி அரசர்களுக்குக்கும் பற்றின்றித்தான் நீதி சொல்லவேண்டும் என்பது விதி. ஆதலின் பற்றற்று இருத்தல் என்பதற்குப் பொருள் நிலையில்லா மானுட வாழ்வில் எதன் பாலும் அதீத ஆசை கொள்ளுதல் கூடாது என்பதே.
அத்தகைய உண்மையில் பற்றற்ற தன்மையில் ஒழுகும் துறந்தாரின் பெருமை அளவிடற்கரியது என்பது இக்குறளின் பொருள்; வள்ளுவரின் பற்றற்ற தீர்ப்பு.
இறைவனுக்கு பக்தனிடம் பற்று!
[இருப்பதால் தான் காப்பாற்றுகிறான்]
சித்தர்களுக்கு சித்தாந்ததில் பற்று!
[சித்தாந்தத்தில் பற்று]
துறவியருக்கு இறையடி இடம் பற்று!
[மறுபிறவி வேண்டாமென ]
புலவனுக்கு கவிதை புனைப்பதில் பற்று!
[மொழியில் உள்ள பற்று!]
"விவாதிப்பதில் எனக்கு பற்று!"மன்னிக்கவும்!
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...