அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 24
உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
பொழிப்புரை (Meaning) :
நெஞ்சுரம் என்னும் திடமான அங்குசத்தால், ஐந்து புலன்களையும் கட்டுப்படுத்திக் காப்பவன், நன் வரங்களைத் தரும் சேமிப்பு இருப்பிற்கு ஒரு விதை போல்வான்.
விரிவுரை (Explanation) :
அறிவாகிய திட அங்குசக் கருவியால், ஐம் பொறிகளையும் அடக்கிக் காக்கின்றவன், வரன் என்னும் சேகரமாகிய இறைவனைச் சேர்வதற்குரிய ஓர் வித்து.
வரன் என்பதற்கு மேலுலகமாகிய வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய என்று அனைவரும் குறிப்பிடுகின்றார்கள்; வித்து என்பது மணி முத்துக்களையும் சேரும் என்பதனாலும், வரன் எனும் வைப்பு நிதியினைச் சாரும் என்றும், வைப்பிற்குரிய வித்து என்பதை நிதியத்திற்குரிய வித்து என்றும் கொள்ளலாம் அல்லவா?
ஆக ஐம்புலன்களையும் தத்தம் புலன் மேற் செல்லாது அடக்கிக் காக்கும் வல்லமை பொருந்தியவர்கள், அதாவது இன்ப, துன்ப நுகர்ச்சிகளைத் துறந்த துறவிகள், மேல் வரம் தரும் வைப்பிற்குரிய வித்து. எனவே சிறு வரம் தரும் சித்தி பெற்றவர்கள் என்றும் வரனாகிய, பெருநிதியாகிய, ஈஸ்வரனாகிய இறைவனைச் சேரும் முத்துக்கள் ஆவார்கள். வரன் எனும் கற்பகத் தாருவிற்கான வித்தாகும் தகுதி பெற்றவர்கள் இவர்கள் என்பதும் கருத்து.
குறிப்புரை (Message) :
நெஞ்சுரத்தோடு ஐம்புலனைக் கட்டுபடுத்திக் காக்கும் துறவியே வரம் தரும் நிலைக்கான வித்தாவான.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
உரன் - உள்ளமிகுதி, ஊக்கம், அறிவு, திண்மை, ஞானம், பலம், மாண்பு, வயிரம், உறுதி, வெற்றி
வரன் - கணவன், மருமகன், சிவன், ஈஸ்வரன், முனிவன்
ஒப்புரை (References) :
திருமந்திரம்: 120
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.
திருமந்திரம்: 121
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.
திருமந்திரம்: 1692
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.
திருமந்திரம்: 2316
ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.
திருமந்திரம்: 2622
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.
***
இயற்கை அறம்!
6 years ago
3 comments:
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.
இவ்விடத்தில் வித்தைக் கெடுத்து என்பது பதஞ்சலி யோக சூத்திரத்தில் வரும் சபீஜம் என்கிற விதையற்ற நிலை. உடம்போடு செத்திட்டிருத்தல் என்பது நிர்விகல்ப சமாதியை குறிப்பது.
இந்தப் பாடலை இங்கே எடுத்த்காட்டாக காட்டியிருக்க வேண்டியதில்லையோ என்று நான் எண்ணுகிறேன். ஒரு வேளை எனது பார்வை தவறானதாகவும் இருக்கலாம்.
@Ashvinji
///உடம்போடு செத்திட்டிருத்தல் என்பது நிர்விகல்ப சமாதியை குறிப்பது.
நிர்விகல்ப சமாதி என்றாலே ஐம்புலனை அடக்கிய நிலைதானே அஃது? எனவே பொருத்தம் கருதிக் கொடுத்தேன்.
///யோக சூத்திரத்தில் வரும் சபீஜம் என்கிற விதையற்ற நிலை.
இந்த விதை என்பது என்ன என்று கொஞ்சம் விளக்குவீர்களா?
மேலும் மேலுலகத்திற்கு வித்து என்கின்றார் வள்ளுவர். ஆதலின் நீங்கள் சொல்லும் விதையற்ற நிலை இப்பூவுலகைச் சார்ந்தது என்று பொருள் கொண்டாலும் பொருத்தம் வருகிறதே?
இருப்பினும் உங்களின் நுண்ணிய கவனிப்பை மெச்சுகின்றேன். உங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றிகள். மீண்டும் வாருங்கள். இத்தகையக் கருத்துச் செறிவுமிக்க பதிவுகளை, உள்ளீடுகளை மிகவும் வரவேற்கிறேன்.
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...