skip to main |
skip to sidebar
திருக்குறள்: 25
அதிகாரம்: 3. நீத்தார் பெருமை. திருக்குறள்: 25ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும், கரி.
பொழிப்புரை (Meaning) :
ஐம்புலன்வழிச் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் அடக்கி அணைத்தவனது ஆற்றலுக்கு, அகன்ற விண்ணகத்தே உள்ளவர்களின் கோமான் இந்திரனே போதிய சான்று.
விரிவுரை (Explanation) :
ஐம்புலன் நுகர்ச்சிகளையும் துறந்தவனது வலிமைக்கு, அகன்ற வானுலக நாயகன் இந்திரனே போதுமான சான்று.
கோமான் என்பதிலேயே நாயகன், வேந்தன் என்பது அடங்கி விடுவதால்
இந்திரன் என்பதற்கு மீண்டும் வேந்தன் என்பது பொருந்தாது. எனவே இந்திரன் எனும் பெயர் கொண்ட ஒருவரையே திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்பது தெளிவு.
இதுகாறும் எந்தச் சமயத்தையும் தழுவாத வள்ளுவனார், இந்திரன் என்னும் புராண நாயகனை ஏன் குறிப்பிட்டார்? இது மிக முக்கியமான கேள்வி. வேத காலங்களுக்கு முன்னரே இருந்தே மழைக்கும், தமிழர்களின் மருத நிலத்துத் தேவனாகவும் இந்திரன் கருதப்பட்டான். மதங்களே உருவாகாத காலத்தே குறிக்கப்பட்ட தலைவன் இந்திரன் என்பதே பொருந்தும்.
தமிழர்களின் ஐந்திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பவை. இவற்றுள் மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, குறிஞ்சியும் முல்லையும் திரிந்த் இடம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். அவற்றின் தெய்வங்கள் விபரம்: குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன்.
பிற்காலத்தில் தோன்றிய அல்லது வேதகாலத்தில் குறிப்பிடப்பட்ட அகலிகை-இந்திரன் மற்றும் அதில் இந்திரன் சபிக்கப்பட்ட கதையையும் இங்கு சிலர் பொருத்துகின்றார்கள். அதாவது தவத்தின்பால் சிறந்திருந்த துறவி கௌதமரின் மனைவி அகலிகையை தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் அபகரித்ததால் துறவியின் சாபத்திற்கு ஆட்பட்டான். பிறன் மனை விளைந்தவன் எவனாக இருப்பினும், துறவியின் வலிமைக்கு ஆட்பட்டதையே இங்கு வள்ளுவர் சுட்டிய்தாகக் குறிப்பார்கள்.
ஆயின் மதங்களின் சார்பு நிலையற்ற வள்ளுவர், இந்திரனே போதிய சான்று என்பதன் காரணம், தவத்தின், அறத்தின், துறவின் வலிமையால் ஒரு சாதாரண இந்திரன், வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெற்றான் என்று சொல்லுவதாகவே தோன்றுகின்றது. சமயக் காலங்களுக்கு முந்தையக் கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வருதல் குறிப்பிடத் தக்கது.
இந்திரன் பற்றிய குறிப்பு மேலும் சமணம், புத்த, சைவ, வைணவ இந்து மதங்களிலும் காணப்படுவதையும் கவனத்தில் கொண்டால், திருவள்ளுவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தைக் குறிப்பிடவில்லை எனப்து விளங்கும்.
எனவே இக்குறளுக்குப் பொருள், புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் எனக் கொள்ளுவதே பொருந்தும்.
குறிப்புரை (Message) :
ஐம்புலன்களை வென்றவர்களுக்கு கிட்டும் பதவிக்கு வானுலக இந்திரனே சான்று.
அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆற்றல் - வலிமை, திறமை
விசும்பு - விண், வானம்
கோமான் - அரசன், நாயகன், வேந்தன், தலைவன்
கரி - சாட்சி, இருத்தை, அடுப்புக்கரி, நிலக்கரி, வைரம், யானை
ஒப்புரை (References) :
திருமந்திரம்: 118
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.
திருமந்திரம்: 119
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.
திருமந்திரம்: 363
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே
திருமந்திரம்: 977
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே.
திருமந்திரம்: 69
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.
திருமந்திரம்: 2589
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.
***
5 comments:
இந்திரனை பற்றிய விளக்கம் அருமை!
ஐம்புலன்களை அடக்குபவன் இந்திரன் கொண்ட உயர் பதவிக்கு ஒப்பானவன் என்பது பொருளா?
ஒருவகையில் அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்திரனே சாட்சி என்றால் அப்பதவி அவருக்குக் கிட்டும் என்பது நிச்சயம் என்பதோடு அல்லாமல் அவரையும் மிஞ்சலாம் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே ஒப்பானவன் என்பதைக் காட்டிலும் அத்தகைய பதவி உத்திரவாதமாகக் கிட்டலாம் என்று கொள்வதே பொருந்தும்.
ஐம்புலனும் அடக்கிய பிறகு இந்திர பதவியை மிஞ்சிய பதவி வந்து என்ன பலன் என கேட்கிறார் ஒரு அறிவாளி![ஐயோ நான் கேட்கல]
ஐம்புலனால் கிட்டுவது வெறும் சிற்றின்பமே. ஆறாம் அறிவால் பெறும் ஞான இன்பமே பேரின்பம் என்பதை ஐம்புலனடக்கிய இந்திரனிற்கும் அவரை மிஞ்சியவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஐம்புலனால் விளைவது ஒரு நொடிச் சிலிர்ப்பு, புல்லரிப்புப் போன்றதொரு இன்பம்; அதுவே எப்போதும் மெய்சிலிர்த்து நிற்கும் அருள்பொழியும் ஆனந்த நிலையான சித்தி அடையும் நிலை என்றால், ஒரு தேவலோகமே அடிபணியக் கிட்டும் என்றால், ஐம்புலன் இன்பத்தை அடக்கி ஆளும் இன்பமே மிகச் சிறந்தது. அறிவாளி என்று நீங்கள் நம்புகின்ற முழுமை அடையாதவருக்கு இதை விளக்குங்கள். நிறை குடங்கள் தத்தளிப்பதில்லை.
Hhhmm Escape................
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...