Tuesday, June 16, 2009

திருக்குறள்: 15


அதிகாரம்: 2. வான் சிறப்பு. திருக்குறள்: 15



கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.


பொழிப்புரை (Meaning) :
கெடுப்பதுவும், கெட்டவர்களுக்குச் சார்பாய் பிறகு அங்கே நிலை எடுப்பதுவும் எல்லாம் மழையே.


விரிவுரை (Explanation) :

பெய்யாது வளத்தைக் கெடுப்பதுவும், அதால் வருந்தியோருக்குப் பிறகு பொழிந்து அங்கே வளத்தை எடுத்துக் கொடுப்பதுவும் எல்லாம் அந்த மழையே.

பொழியாது அல்லது அதிகம் பொழிந்து கெடுதலைக் கொடுப்பதும், பிறகு வளத்தை எடுத்துக் கொடுப்பதும் மழையே.

பெய்யும் மழையின் அளவு அதிகமாயினும் கெடுதலே, ஆயினும் அதால் வருந்துவோருக்குப் பிறகு மருந்தாகி வாழ்வு தருவதும் மழையே.

அதாவது இந்த உலகத்தின் வறுமைக்கும், வளமைக்கும் காரணம் மழையே என்பது பொருள்.

குடி கெடுப்பதும் பிறகு வாழவைப்பதும் மழையே. துன்பத்தையும், துன்புற்றோருகுப் பிறகு இன்பத்தையும் வழங்கும் சிறப்பு மழைக்கே உரியது.

மழை இறைவனின் மொழிகளில் ஒன்று என்பது சிந்தித்தால் விளங்கும்.


குறிப்புரை (Message) :

ஆக்கவும், அழிக்கவும் வல்லது மழை.


அருஞ்சொற் பொருள் (
Synonyms) :
சார்வாய் - சார்பாய், சார்பு நிலையாய்


ஒப்புரை (References):

விண், வான், முகில் எல்லாம் அந்த இறைவனே.

திருமந்திரம்:11
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


திருமந்திரம்:31
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

4 comments:

Anonymous said...

Sukh,dukh ka sathi!

Uthamaputhra Purushotham said...

@Anonymous

சுகத்திற்கும் துக்கத்திற்கும் கல்யாணம் என்கிறீர்களா?

கடவுளே ஹிந்தி தெரியாமல் எவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது. ஹிந்திக் காரங்களெல்லாம் திருக்குறளைப் படிச்சுப் பிச்சு வாங்கறாங்க. நமக்குத்தான் ஹிந்தி வர மாட்டேங்குது. :)

Anonymous said...

Hello!
Sadhi illa Sathi,[Tha not Dha]
Sathi Means துணை,
மழை சுகத்திற்க்கும் துணையாக இருக்கு, துக்கத்திற்க்கும் துணையாக இருக்கு,இதான் இதன் அர்த்தம்.

Uthamaputhra Purushotham said...

ஓ அருமை.

அழிக்கவும், ஆற்றவும் வல்லது மழை...
என்றுதான் தலைப்பிட்டிருக்கிறேன். இதுவும் நன்றாக இருக்கிறது.

நன்றி.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...