Wednesday, November 11, 2009

திருக்குறள்:140 (இணக்கமெனும் ஒழுக்கம்...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 140

இணக்கமெனும் ஒழுக்கம்...

In English

உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும்,
கல்லார் அறிவிலாதார்.

பொழிப்புரை :
உலகத்தோடு ஒன்றி ஒழுகுதலை, பலவற்றைக் கற்றும், கல்லாதவர் அறிவில்லாதவர்.

விரிவுரை :
பலவற்றைக் கற்றிருந்தும், உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுகுதலைக் கல்லாதவர் அறிவில்லாதவர்.

வாழ்வில் எத்தனைதான் கற்றிருந்தும், உலகத்தோடு இணைந்து, இசைந்து, இணக்கத்தோடு பொருந்தி வாழத் தலைப்படாதார் கற்ற கல்வியினால் பயன்தான் என்ன? அஃது கல்வியின் குற்றமா? ஆகக் கல்வியில் தவறு இருக்க வாய்ப்பில்லை. தாம் கற்றவற்றுள்ளிருந்து வாழ்க்கையின் அடிப்படைப் படிப்பினையைக் கல்லாதவரே மூடர்.

கால, தேச மற்றும் வர்த்தமானம் என்னும் நடப்பிற்கேற்ப, மாற்றங்களுக்கு உட்பட்டு, உடன்பட்டு, அனுபவ அறிவுக் கண்களால் உய்த்துணர்ந்து, நல் ஒழுக்க வழி நின்று நயந்தரும் உயர்ந்தோரைச் சார்ந்து, இணங்கிச் செயலாற்றுதலே உலகோடு ஒத்து வாழுதல் எனும் அறிவுடையோர் வாழும் முறைமையாகும்.

உலகம், உயிர்கள், இயற்கை மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக நடப்புக்களை மீறிய ஆக்கபூர்வமான சிந்தனைகளும், ஆராய்ச்சிகளும் மனிதனை முன்னெடுத்துச் செல்லுவதற்காகச் செய்யப்படும், உலகத்தோடு, இயற்கையோடு ஒன்றியச் செயல்களே. அவை நடப்பு விதிகளை மீறுவது போல் தோன்றினாலும், நல்லவை, அல்லாதவை என்னும் பாகுபாடு அறிந்து, பயன்பாட்டை நாடி, உய்வதற்கும், உயர்வதற்கும் உலகம் மேற்கொள்ளும்; புதிய பாதையினைத் தேடி ஏகும் நல் வழக்கமே.

உலகத்தோடு ஒன்றாத மடமை என்பது, உலகினோர் மேற்கொண்ட நல் ஒழுக்கத்தைத் தவிர்த்து, விலகித் தீய வழிச் செல்லும் கெட்ட குணம். இயற்கைக்கு ஒவ்வாது, அறிவிற்குப் பொருந்தாது, சக மனிதரோடு இணங்காது காரியமாற்றி; பழித்ததையும் கழித்ததையும் ஒளித்துச் சுகித்து; உதவாத, உருப்படாத வழிகளில் ஏகி; உணர்வின்றி, நலனின்றி, விதண்டா வாதமாற்றி; காலத்தைப் பொருளைப் பாழாக்கி; கற்றவரையும், மற்றவரையும் கரித்து; யாரும் போகாத ஊருக்கு வழி தேடி; தீதை ரசித்து, திகட்டலை ருசித்து, சிந்தனை குழம்பி, சோம்பலில் உழம்பி, ஒழுக்கம் கெடுத்து, உபத்திரம் கொடுத்து, உறவுகள் அறுத்து, ஓயாது அழுது, தெய்வம் இகழ்ந்து, தீதினைப் புகழ்ந்து, அல்லவை எல்லாம் நல்லன வென்று அறிவு மழுங்கி, அரை குறை அறிவை ஆனந்தித்து, அறிந்தன பகர அறிவிலி தேடி, கலைகளைப் பழித்து, சிலைகளை அழித்து; அழகைச் சிதைத்து, அழுக்கை ரசித்து; கயமையில் நிதியம், சூட்சியில் ஆட்சி; விடியா இரவு, பொருந்தா உறவு; இதயம் கறுத்து, சுதந்திரம் வெறுத்து, கற்பைத் துப்பி, எச்சிலை நக்கி, தாயைத் தமிழைத் தரணியைத் தாழ்த்தி, கருமிப் பொருமி, லாவணி பாடி, தரித்திர விளக்கினில் சரித்திரம் படித்து, குற்றப் பரம்பரைத் தொட்டுத் துலங்க, சாத்திரம் மருவி, சூத்திரம் எழுதி, ஆத்திரம் மூத்திரம் அனைத்திலும் உழண்டு, அறிவும் அகமும் அறவே கழண்டு, சோத்துத் துருத்தியாய், நாற்றப் பிண்டமாய், பகலில் இருளைத் தேடும் முண்டமாய், விலங்காய் வாழ்வை விளங்கிடும் பிறப்பே.

இது கவிதைச் சந்தத்தில் அமைந்ததால், கவிதையாகவே சொல்லலாமே எனத் தோன்ற முயற்சித்தது கீழ்க்கண்டவாறு:

உலகத்தொடு ஒன்றா மடமை...

இயற்கை ஒவ்வா; அறிவு பொருந்தா;
இணைவரு மனிதரும் இணங்காச் செயலால்
பழித்தவை கழித்தவை ஒளித்துச் சுகித்து
உதவா வழியினில் உருப்படாது ஏகி
உணர்வும் நலனும் இலாதாது ஆகி
இதமிலா விதண்டா வாதமும் பேசி.........................1

காலம் பொருளைப் பாழென வாக்கி
கற்றவர் மற்றவர் உற்றவர் கரித்து
யாரும் போகா ஊரினைத் தேடி
தீதை ரசித்து; திகட்டலை ருசித்து
சிந்தனை குழம்பி; சோம்பரில் உழம்பி
ஒழுக்கம் கெடுத்து; உபத்திரம் கொடுத்து................2

உறவுகள் பேணி; ஓயாது அழுது
தெய்வம் இகழ்ந்து; தீதினைப் புகழ்ந்து
அல்லவை எல்லாம் நல்லெனக் கூறி
அறிவு மழுங்கி; ஆணவம் பெருக்கி
அரை குறை அறிவை ஆனந்தித்து
அறிந்தன பகர அறிவிலி தேடி................................3

கலைகளைப் பழித்து; சிலைகளை அழித்து
அழகினைச் சிதைத்து; அழுக்கினை ரசித்து
கயமை உகந்து நிதியம் தேடி
சூட்சியில் ஆளும் மாட்சிமை வகுத்து
விடியா இரவு; பொருந்தா உறவு;
இதயம் கறுத்து; சுதந்திரம் வெறுத்து.......................4

கற்பைத் துப்பி; எச்சிலை நக்கி
தாயைத் தமிழைத் தரணியைத் தாழ்த்தி
கருமிப் பொருமி இலாவணி பாடி
தரித்திர விளக்கில் சரித்திரம் படித்து
குற்றப் பரம்பரைத் தொட்டுத் துலங்க
சாத்திரம் மருவி சூத்திரம் எழுதி...............................5

ஆத்திரம் மூத்திரம் அனைத்திலும் உழண்டு
அறிவும் அகமும் அறவே கழண்டு
சோத்துத் துருத்தியாய் நாற்றப் பிண்டமாய்
பகலில் இருளைத் தேடும் முண்டமாய்
வந்து விழுந்த சில்லறை கொண்டு
வருகிற சில்லறை மனிதரில் மருண்டு.......................6

உருண்டு திரண்டு உள்ளம் பிரண்டு
உற்றவர் மற்றவர் கண்டு மிரண்டு
நெஞ்சம் புலம்பி, நெடுவழி நோக்கி
பொய்யும் புரட்டும் மொய்யென வைத்து
கைத்தடி ஏந்தி கைத்தலம் பற்ற
வைதவர் நொய்தவர் வல்லமை கொள்ள..................7

விடலை இளைஞரின் வெற்றி வெறுத்து
வஞ்சப் புகழ்ச்சியில் நொந்து படுத்து
ஆப்பிடைக் குரங்காய் அரங்கம் பிதற்றி
காப்போம் பொருளெனக் கதறித் துடித்து
திரண்ட திரவியம் புரட்டிச் சுருட்டி
தேறிய வரையில் இலாபம் பார்த்து..........................8

சுடலைப் பயத்தில் சுருண்டு படுத்து
சோகித்துச் சுகித்து சொந்தங்கள் சபித்து
கண்டவை கேட்டவை அனைத்தும் வெறுத்து
காண்பவை எல்லாம் கரித்து முடித்து
தீதையும் சூதையும் போதனை செய்து
தீராப் பிளவை நெஞ்சினில் தேக்கி...........................9

மூத்த குடியை முத்தமிழ் மரபை;
அள்ளக் குறையா ஐம்பெரும் காவியம்
சொல்லும் அழகை; கன்னற் தமிழை;
கண்ணகி மாதவி கற்பின் திறத்தை
வள்ளுவச் சிறப்பை கம்பனின் அழகை
பண்டு சொன்ன பாரதி தீரத்தை..............................10

இன்னற் செய்து; இழிவு படுத்தி;
அரைகுறைப் பொதுமை நிறைவுறப் பேசி
கோணற் புத்தியில் கொள்கை வடித்து
நெஞ்சம் இருண்டு நீர்மேல் எழுத்தாய்
நேர்மை நில்லா பேதமை உரைத்து
கருமை நாடகம் மேலுறக் களித்து...........................11

ஒழுக்கிய நீரினில் மீன்வலை வீசி
ஒழுகிடும் வாழ்வை உயர்வெனப் பேசி
இழவினைச் சுகிக்கும் இழிவுறு பிறப்பாய்
கழுகாய்ப் பருந்தாய் பிணத்தினை உவந்தே
புழுத்த நரகலைப் புசித்துக் கொழுக்கும்
விலங்காய் வாழ்வை விளங்கிடும் பிறப்பே!..............12

குறிப்புரை :
உலகோடு இணங்கி ஒழுகுவர் அறிவுடையோர்.

அருஞ்சொற் பொருள் :
ஒல்லுதல் - இயலுதல், உடன்படுதல், பொருந்துதல், பொறுத்தல்

ஒப்புரை :

திருமந்திரம்: 2119
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

திருமந்திரம்: 2120
நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே.

திருமந்திரம்: 2121
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே.

திருமந்திரம்: 2156
கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

ஔவையார். ஆத்திச்சூடி:
19. இணக்கம் அறிந்து இணங்கு.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
73. நேர்பட ஒழுகு.

ஔவையார். கொன்றை வேந்தன் :
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்.

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 140

Discipline called harmony...
In Tamil

ulakaththOdu otta ozhukal, pala kaRRum,
kallAr aRivilAthAr.

Meaning :
Though learnt many, those who do not know to live in harmony with the world are ignorant.

Explanation :
How much ever learnt those who do not know to live in cohesion with the world are fools and ignorant.

What is the use of their education though how much ever they have learnt when they do not know to live in cohesion, cooperation and harmony with the world? Is it the problem of their education? No, it cannot be the mistake of education. Those who have not learnt the fundamentals of life from their education are the fools.

According to the period, place and present time, adhering to the changes, in cooperation, understanding through the experience and wisdom attained, standing along with the righteous people for the virtuousness, with harmony and positive attitude doing their affairs is what living in cohesion with the world or the life style of the wise.

Exceeding the current practices, thinking and researches for the betterment of the world, living beings, nature and society are again in cooperation with the nature and the world. Therefore though they may look like going out of the way, by having the understandings of pros and cons and considering the betterment and usability to the society at large, they are meant for pioneering the innovative ways in good sense, again falling within the framework of cohesiveness to the world.

The foolishness of no cohesion to the world is avoiding all the good virtues of the world but having the attitude and character to follow only all the ills regarded as bad by the world. The illogical to the nature; non cooperating with the coexistent; hidden enjoyment for all the cursed, excreta and discarded; taking useless and unrealistic ways; senseless; no goodness; quibbling; wasting the time and wealth; scolding the educated and others; seeking the place of non existing; liking all the bad; tasting the emesis; getting confused thinking; disconcerted through laziness, spoiling the disciplines; intruding and disturbing with troubles; isolating from the relatives; crying always; blaming and cursing the God; praising all ills; getting blunt and dull to comprehend that all the bad are the best; enjoying the half gained knowledge as the great; searching fools to share the little known; cursing all the forms of arts; demolishing the statues; destroying the beauties; praising the dirties; earning through cunningness; getting power through conspiracy and deceits; endless nights; incompatible relationships; blackening the heart; rebelling the freedom; spitting on the chastity; licking the refused leavings; lowering the mother, language and the world; becoming stingy; fuming and deceit singing in praise; reading the history in poor light; all the bad omens to flourish; going against the customs; writing wrong ethics; turning impatient and hasty; loosing the brain and heart; growing the stomach as the bag of food; smelling rotten; searching the dark in the day light; understanding the life as an animal; oh the stupid birth!

Message :
The wise will live in harmony with the world.

***

2 comments:

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள்

UthamaPuthra said...

நன்றிகள் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே.

அனைவரும் உள்ளத்தில் குழந்தைகளாக குதூகலத்தோடு குழந்தைகள் தினத்தைக் கொண்டாட வாழ்த்துகின்றேன்.

நன்றி.

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...