Sunday, November 8, 2009

திருக்குறள்:136 (உள உறுதி ஒழுக்கம் தவறாது...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 136

உள உறுதி ஒழுக்கம் தவறாது...

In English

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்; இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொழிப்புரை :
ஒழுக்கத்தினின்று வழுவார் வலியோர்; இழுக்கத்தின் அழிவின் கடும்போக்கு அறிந்து.

விரிவுரை :
ஒழுக்கமற்ற இழுக்கதினால் ஏற்படும் அழிவின் கடுந்தன்மையை அறிந்த மன வலிமையுற்றோர் ஒழுக்கத்தினின்று வழுவுதை, நீங்குவதைச் செய்யார்.

ஒன்றைச் செய்வதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அதனால் ஏற்படும் நன்மை கருதி அதன்பால் விருப்புக் கொண்டு செயலை மேற்கொள்ளுவது. இன்னொன்று அக்காரியத்தைச் செய்யாது இருந்தால் ஏற்படும் தீமையை உணர்ந்து, அஞ்சி, அதைத் தவிர்க்க அச் செயலை மேற்கொள்ளுதல். அதாவது நன்மை உங்களை ஈர்க்காது போயினும், அதன் துன்பம் உங்களைத் துரத்திச் செய்விக்கத் தூண்டும்.

அதைப்போன்றே ஒழுக்கமற்ற நிலையான இழுக்கத்தினால் ஏற்படும் தீமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு அஞ்சி, மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, ஒழுக்கத்தைத் தவற விட்டுவிடாது மேற்கொள்ளுவர் மன வலிமையுடைய அறிவுடையோர். அறிவு இருப்பினும் கூட மனத் திடம் இல்லாது போயினால் ஒருவர் ஒழுக்கத்தை மேற்கொள்ளுவதில் மயக்கமும், தயக்கமும், சில வேளைகளில் பயமும், சோம்பலும் அடையக் கூடும். ஆனால் மனத்திடமுற்றோர் கொள்கைப் பிடிப்போடு, ஒழுக்கம் நீங்கினால் உண்டாகும் துன்பத்தை மனத்தால் உணர்ந்து, அவ்வொழுக்கத்தைத் தவறாது காப்பர்.

ஆக ஒழுக்கத்தைத் தவற விடாது ஒழுகுவதற்கு மனவலிமை, மனத்திடம் அவசியம் என்பது மறை பொருள். மனத்திடம் ஒழுக்கத்தின் மேல் வைக்கும் காதலினால் அன்றில் அதை ஒழுகாதபோழ்து உண்டாகும் கடும் துன்பத்தை எண்ணி உணர்ந்தால், தானாகவே தோன்றிவிடும்.

குறிப்புரை :
ஒழுக்கம் வழுவினால் உண்டாகும் கேட்டை நினைந்துணர்ந்து மனத்தைத் திடப்படுத்தி ஒழுக்கத்தைத் தவறாது மேற்கொள்ளுதல் வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :
ஒல்கு - தளர், சோர்வடை, மெலி, குழை, நடுங்கு, சுருங்கு, ஒதுங்கு, வளை, தொடு, காயப்படு, வறுமையடை,
ஊறுபடு
உரவோர் - வலியோர்
ஏதம் - குற்றம், துன்பம், கேடு, அழிவு
படுபாக்கு - தீவிரப் போக்கு, கடும்நிலை, கடும்போக்கு

ஒப்புரை :

திருமந்திரம்: 2097
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

திருமந்திரம்: 2098
கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம்
வருத்திநில் லாது வழுக்கின் றாரே.

திருமந்திரம்: 2099
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

திருமந்திரம்: 2100
கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின்
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே.

திருமந்திரம்: 2101
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே.

திருமந்திரம்: 2102
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
64. தொன்மை மறவேல்.
71. நூல் பல கல்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 136

Strong mind never fails discipline...
In Tamil

ozhukkaththin olkAr uravOr; izhukkaththin
Etham padupAkku aRinthu.

Meaning :
The strong minded never fail in discipline; having aware of the indiscipline’s serious afflictions.

Explanation :
Having known the serious afflictions of the indiscipline, the strong minded never fail in following the good discipline.

There are two reasons or ways to do things. One is by considering the good results it would benefit, showing interest and doing it. The other one is by considering if the work is not done what would be the afflictions it may cause and then carrying out the work out of scare and to avoid the bad afflictions. That is, even though its good results not attract you, its bad afflictions will force you to carry it out.

Same way, by considering and understanding the bad afflictions caused by the indiscipline, afraid of the same, making up the mind, without missing the discipline executing the work will be adopted by the strong minded wises. Though wise in knowledge but when there is no strong mind one may have apprehensions and boredom to adopt the discipline, but when they have the strong and principled mind, they think and realize the problems afflicted by indiscipline, and follow and preserve the discipline without fail.

Therefore to adopt the discipline without fail, there must be strong and principled mind is the implicit meaning here. When there is love towards the discipline and principles or when there is apprehension about the indiscipline's serious woes, the strong mind automatically emerges.

Message :
Realizing the adversities of indiscipline become strong minded to follow the discipline scrupulously.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...