Saturday, June 13, 2009

ஆதி பகவன் விளக்கம்

கீழே இருப்பது ஜூபிலி தமிழ் பேரகராதியிலிருந்து. ஒவ்வொரு வார்த்தையும் தொடர்ந்து சென்றால் மூலச் சொற்களின் தொடக்கம் புரியும்.

ஆதங்கம் - ஆபத்து, உபத்திரவம், கலம், காய்ச்சல், தீங்கு, நோய், பறையொலி, புயம்
ஆதபம் - ஒளி, குடை, வெயில்
ஆதண் - நோய், வருத்தம்
ஆதவன் - சூரியன்
ஆதம் - ஆதரவு, விருப்பு, கூந்தற்பனை
ஆதரம் - அன்பு, ஆசை, ஊர், கேள்வு, சிலம்பு, துவக்கம்
ஆதரவு - அன்பு, ஆதாரம், உதவி, விருப்பம்
ஆதரிசம் - உரை, மூலம்
ஆதரிசனம் - கண்ணாடி
ஆதரித்தல் - அன்பு வைத்தல், உதவி செய்தல், சங்கித்தல், தாபரித்தல்
ஆதலை - உதவி, தாபரிப்பு
ஆதல் - ஆகுதல், தெரிதல், நுணுக்கம், கல்விநூல், கூத்து
ஆதவம்- ஆதபம்
ஆதளை - ஆமணக்கு, ஆயாசம், மாதளை
ஆதளைமாதளை - வருத்தம்
ஆதனமூர்த்தி - சிவலிங்கம்
ஆதனம் - ஆசனம், சீலை, நிலைமை, நீளுதல், பார்வை, விலாசம்
ஆதன் - அருகன், அறிவிலான், உயிர், குரு, குருடன் (இதிலிருந்து ஏதன் வந்தது எனலாம்!)
ஆதாயம் - இலாபம், நன்மை, இலக்கினத்துக்கு பதினோராமிடம்
ஆதாரம் - அடி, ஈடு, அத்திவாரம், தானம், நிலை, பாத்தி, மழை, வாய்க்கால்
ஆதானம் - ஈடு, ஏற்றுக்கொள்ளுதல், சங்கற்பித்தல், நிறுவனம், பெறுதல்
ஆதி - அதிசயம், அருகன், இடம், இறைவன், ஈடு, எழுவாய், ஒரு தாளம், கடவுள், காய்ச்சற் பாஷாணம், சூத்திரம், சூரியன், நேரோடல், தொன்மை, பழமை, பிரதானம், பரமசிவம், பிரமன், புத்தன், மண்டலமாயோடல், மனவிருப்பம், முதல், மூலம், வனப்பு, பழங்கதை கூறுதல், விட்டுணு, வேர்
ஆதிகரன் - பிரமன்
ஆதிகாரணம் - முதற்காரணம்
ஆதிக்குரு - முப்பூ, அது பஞ்சலோகங்களையும் பேதிக்கச் செய்வது, பூவழலை, பூநீறு, முதன்மை பெற்ற குரு
ஆதிசக்தி - பராசக்தியில் ஆயிரத்தொரு கூறு கொண்டது, ஆன்மாக்களுக்கு விடய சுகத்தைப் பொருந்தும் ஆணவமலத்தைப் பக்குவப் படுத்தும் தன்மையது

எனவே ஆதி என்பது மூலம், முதல், பழைய என்ற பொருளில் கொள்ளுதல் வேண்டும். அது தமிழ் சொல்லே.

பகம் - அவாவின்மை, ஈச்சுரத் தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியமென்மறுகுணம், அழகு, காந்தி, பெண்குறி, மகத்துவம், முத்தி, மந்தாரை
பகரம் - அலங்காரம், மினுக்கம், ஓரெழுத்து
பகர்வு, பகர்தல் - கூறல், சொல்லல், விற்றல்
பகலவன் - சூரியன், பரணிநாள்
பகலோன் - சூரியன்
பகல் - ஒளி, சூரியன், தினம், நடு, பகற்காலம், பகுதல், பிரிதல், பிளத்தல், மதியாணி, மத்தியானம், மூர்த்தம், நுகத்தின் மத்தியாணி
பகவதி - தருமதேவதை, துர்கை, பார்வதி
பகவன் - அரன், அரி, அருகன், கடவுள், குரு, பிரமன், புத்தன்
பகவான் - கடவுள், சூரியன், துவாதசாதித்தரில் ஒருவன்.
பகன் - பகாசுரன்
பகாரி - கண்ணன், வீமன்
பகாலி - சிவன்
பகீரதி - கங்கை
பகீரதன் - ஓர் அரசன்
பவந்தி - கற்புடையோள்
பவன் - கடவுள், தானயுண்டானவன்

எனவே பகவன் என்பது பரமசிவன், பழையவன், படைத்தவன், பகுத்தவன், பகலவன் எனப் பொருளாகும். இதுவும் தமிழின் சொந்தச் சொல்லே

இப்போது இரண்டையும் சேர்த்தால் ஆதி பகவன் என்பதற்கு:

மூலமுதல்வன் என்றும் பழைய பரமசிவம் என்றும் பொருந்தும்.



மேற்கோள்கள் (References) :
திருமந்திரம்: 2
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.


திருமந்திரம்: 11
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


திருமந்திரம்: 15
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.



சேக்கிழார் பெரியபுராணம்: 549-550
நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார் 549

மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் 550


இதிலும் ஆதி மூர்த்தியார் என்பது சிவனிற்கே கூறப்பட்டதை கவனிக்கவும்.


0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...